

மாசி மாதப் பிறப்பும் சனிக்கிழமையும் இணைந்தநாளில், சந்திர தரிசனமும் காண்பது நம் பாவங்களையெல்லாம் போக்கக் கூடியது என்கிறார்கள் ஆச்சார்யர்கள். மாலையில் நவக்கிரக வழிபாடு செய்வதும் நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை தரிசனம் செய்வதும் கிரக தோஷங்கள் அனைத்தையும் போக்கும் என்பதும் ஐதீகம்.
மகத்துவம் நிறைந்த மாசி என்பார்கள். மாசி மாதத்தில் கும்பாபிஷேகம் செய்தால் அந்த ஆலயத்தின் சாந்நித்தியம் உலகெங்கிலும் வியாபிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதேபோல், உபநயனம் என்று சொல்லப்படுகிற யக்ஞோபவீத வைபவத்தை மாசி மாதத்தில் செய்வது இன்னும் சிறப்புகளைத் தரும்; அந்த பாலகனுக்கு கல்வியையும் ஞானத்தையும் வழங்கும் என்கிறார்கள்.
மாசி மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள், வழக்கத்தை விட பன்மடங்கு பலன்களை வழங்கும் என்று விளக்குகிறார்கள். ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறையும் சந்திர தரிசனமும் வாழ்வில் நினைத்துப் பார்க்கவே முடியாத மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரும் என்றாலும் மாசி மாதத்தின் சந்திர தரிசனம் இன்னும் சாந்நித்தியமானது என்பார்கள்.
சந்திரன் மனோகாரகன். நம் மனதை நல்வழிபடுத்துவதும் மனதை இன்னும் இன்னும் குழப்பப்படுத்துவதுமான ஆதிக்கம் கொண்டவன் சந்திர பகவான். அதனால்தான் நிலவு தரிசனம், சந்திர தரிசனம், சந்திர பகவான் வழிபாடு என்றெல்லாம் சொல்லி வைத்திருக்கிறது சாஸ்திரம்.
மாசி மாதத்தில் அதுவும் மாசி மாதப் பிறப்பில், மாலை வேளையில், சந்திர தரிசனம் செய்வது மனோபலத்தைக் கொடுக்கும். மனதில் உள்ள குழப்பங்களைப் போக்கும். மனதில் தெளிவையும் மனதில் மகிழ்ச்சியையும் தந்து புத்தியில் தெளிவையும் காரியத்தில் வீரியத்தையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மாசி மாதப்பிறப்பில் சனிக்கிழமையில்... மாலையில் சந்திர பகவானைத் தரிசிப்போம். நவக்கிரகத்தில் உள்ள சந்திரனுக்கு விளக்கேற்றி பிரார்த்திப்போம். திங்களூர் சென்று சந்திர பகவானை தரிசிப்பதும் இன்னும் சிறப்பு.
மனோபலம் தரும் சந்திர தரிசனம் மேற்கொள்வோம்.