மாசி மாதப் பிறப்பில் தர்ப்பணம்; மகத்துவ மாசியில் முன்னோர் வழிபாடு! 

மாசி மாதப் பிறப்பில் தர்ப்பணம்; மகத்துவ மாசியில் முன்னோர் வழிபாடு! 
Updated on
1 min read

மாசி மாதப் பிறப்பில் தர்ப்பணம் செய்வதும் முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்வதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருளுவார்கள் முன்னோர்கள் என்பது ஐதீகம்.

மகத்துவம் நிறைந்தது மாசி மாதம் என்பார்கள். மாசி மாதத்தில் சகல காரியங்களும் செய்வதற்கு அனுகூலமான மாதம் என்று போற்றுகிறது சாஸ்திரம். மாசி மாதத்தில்தான் கலை, கல்வி முதலான விஷயங்களை புதிதாகக் கற்றுக் கொள்வார்கள்.

உபநயனம் என்று சொல்லப்படுகிற யக்ஞோபவீதம் முதலான காரியங்களை மாசி மாதத்தில் செய்வது சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் எதைத் தொடங்கினாலும் அவை பன்மடங்காகப் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பும் முன்னோர்களை வழிபடுகிற நாளாகத்தான் சொல்லிவைத்திருக்கிறது சாஸ்திரம். பனிரெண்டு தமிழ் மாதங்கள், பனிரெண்டு அமாவாசைகள், திதி, சிராத்த காலங்கள், புரட்டாசி மகாளய பட்ச பதினைந்து நாட்கள், கிரகண காலங்கள் என மொத்தம் 96 வகையான தர்ப்பணங்கள் உள்ளன என்றும் இந்த நாட்களில் மறக்காமல் பித்ரு காரியங்களைச் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி மாத தமிழ்ப் பிறப்பு ரொம்பவே விசேஷம். அதேபோல், தை தமிழ் மாதத்தின் பிறப்பு சிறப்பு வாய்ந்தது. அந்தவகையில், மாசிக்கு நிகரான பிறப்பில்லை என்று போற்றுகிறார்கள். மாசி மாதத்தின் தமிழ் மாதப் பிறப்பு நாளன்று, முன்னோர்களை வழிபடவேண்டும். அவர்களை நினைத்து தர்ப்பணங்கள் செய்யவேண்டும். நம்முடைய கோத்திரத்தைச் சொல்லி, இறந்தவர்களின் பெயர்களை மூன்று மூன்று முறை சொல்லி, எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

இதனால் முன்னோர்கள் மகிழ்ந்து போய் நமக்கு ஆசியை வழங்குகின்றனர். இந்தநாளில், அதாவது மாசி மாதப் பிறப்பு நாளில், நீர்நிலைகளில் நீராடுவதும் ஆற்றங்கரைகளில், குளக்கரைகளில், கடற்கரையில் தர்ப்பண காரியங்களைச் செய்வதும் கடந்த பிறவியில் உள்ள பாவங்கள் அனைத்தையும் போக்கவல்லது என்கிறார் முரளி குருக்கள்.

தை அமாவாசை முதலான நாட்களில் தர்ப்பணம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அதேபோல் மாசி தர்ப்பணமும் மகத்தான பலன்களை வழங்கவல்லது. இந்தநாளில், பசுவுக்கு அகத்திக்கீரை வழங்குவதும் நான்குபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குவதும் இந்தப் பிறவியில் புண்ணியங்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

நாளை 13ம் தேதி சனிக்கிழமை, மாசி மாதப் பிறப்பு. மகத்துவம் நிறைந்த மாசி மாதப் பிறப்பில், முன்னோர் ஆராதனைகள் செய்வது நம்மையும் நம் சந்ததியையும் சிறக்கச் செய்யும்; செழிக்கச் செய்யும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in