

தை அமாவாசையை ஒட்டி காரைக்கால் கடற்கரையில் நித்யகல்யாணப் பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி செய்யும் நிகழ்வு இன்று (பிப்.11) நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற நித்யகல்யாணப் பெருமாள் கோயில் சார்பில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசையின்போது தீர்த்தவாரி வைபவம் நடைபெறும். இன்று தை அமாவாசை என்பதால் காரைக்கால் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
அப்போது பக்தர்களுக்குத் தீர்த்தவாரி வழங்கும் வகையில், நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவரான நித்யகல்யாணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் காலை 6 மணியளவில் கடற்கரைக்கு எழுந்தருளினார்.
பின்னர் அஸ்திர தேவருக்கு பால், பன்னீர், திரவியப் பொடி, பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. இதில் திரளான அளவில் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர். தீர்த்தவாரி நிறைவடைந்து கோயிலுக்குப் புறப்பட்ட சுவாமிக்கு வீதிகளில், பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் வாரிய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.