தை அமாவாசை; பாவமெல்லாம் போக்கும் ராமேஸ்வரம்! 

தை அமாவாசை; பாவமெல்லாம் போக்கும் ராமேஸ்வரம்! 
Updated on
2 min read

புண்ணியம் நிறைந்த தலம் என்றும் பழைமை வாய்ந்த தலம் என்றும் போற்றப்படுகிறது ராமேஸ்வரம். காசி, ராமேஸ்வரம் தலங்களில், வாழ்வில், இந்தப் பிறவியில் ஒருமுறையேனும் சென்று தரிச்க்க வேண்டும். அப்படி தரிசிப்பதும் முக்தி. முன்னோர் வழிபாட்டை இங்கே இந்தத் தலங்களில் செய்வதும் பாவங்களைப் போக்கும் என்பது உறுதி.

கடலுக்கு அருகில் உள்ள தலங்களில் ஒன்று ராமேஸ்வரம். இங்கே சிவனாரின் திருநாமம் ஸ்ரீராமநாத சுவாமி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள்.

ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் ஆகியோரின் பாடல் பெற்ற அற்புதத் திருத்தலம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம். பிரமாண்டமான பிராகாரம், அற்புதமான வேலைப்பாடுகளுடன் தூண்கள், அழகிய சிற்பங்கள் என கலைநயத்துடனும் சாந்நித்தியத்துடனும் திகழ்கிறது ராமேஸ்வரம் திருத்தலம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், அமைந்துள்ளது ராமேஸ்வரம். இந்தத் தலம் எப்படி முன்னோர் ஆராதனைக்கு பெயர் பெற்றதோ அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி திருத்தலமும் விசேஷமானது என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

இந்தியாவில் உள்ள 12ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராவணனைக் கொன்ற பாவம் தீருவதற்காக, ஸ்ரீராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்! மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்பாள் ஸ்ரீ பர்வத வர்த்தினி.

ஸ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றார். ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்குவதற்காக, மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமர். இதனால், மூலவருக்கு ராமநாத சுவாமி என்றும் தலத்துக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது தல புராணம்!

காசி மற்றும் ராமேஸ்வரம் யாத்திரையானது, வாழ்வில் மிக மிக முக்கியத் துவம் வாய்ந்தது. காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று, கங்கையில் மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்வது ஒரு சடங்காகவும் சம்பிரதாயமாகவும் இருக்கிறது. பிறகு காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்வார்கள் பக்தர்கள்.

இங்கு கோயில் கொண்டுள்ள பர்வதவர்த்தனி அம்பாள், சக்தி வாய்ந்தவள். இங்கே உள்ள அம்பாளின் பீடத்தில் ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் அமைந்துள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு அலங்காரம் செய்வார்கள். அம்மன் சன்னதி பிரகாரத்தில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருவதும் அரிதான ஒன்று என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

மேலும் பர்வதவர்த்தனி அம்பாள் சந்நிதியின் கோஷ்டத்தில், அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமபிரான் பூஜை செய்யும் சந்நிதி அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷத்தில் இருந்து விடுபடவும் இந்த சந்நிதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்வது மகோன்னதமான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இரண்டு லிங்கங்களுக்கு மத்தியில் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசங்கரநாராயணர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்க சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

தலத்தின் விசேஷமாக, ஆதிசங்கரர் அமைத்துள்ள ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த ஸ்படிக லிங்கத்திற்கு, தினமும் ஐந்து மணி முதல் ஆறு மணி வரை மட்டுமே பூஜைகள் நடைபெறும். தரிசனமும் அப்போதுதான் கிடைக்கப்பெறுவோம்.

இத்தனை பெருமைகள் கொண்ட ராமேஸ்வரம் தலத்தின் தீர்த்தங்கள் மகிமை மிக்கவை. எண்ணிலடங்காத பலன்களைக் கொடுக்கவல்லவை. தீர்த்த நீராடுவது விசேஷம். குறிப்பாக பித்ருக்கடன் செலுத்துவது நம் பாவங்களையெல்லாம் போக்கும். புண்ணியங்களையெல்லாம் பெருக்கித் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளைய தினம் 11ம் தேதி அமாவாசை. தை அமாவாசை. அற்புதமான இந்தநாளில், முன்னோரை வணங்குவோம். பித்ருக்கடன் தீர்ப்போம். அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் விடுவோம். காகத்துக்கு உணவிடுவோம். இன்னும் முக்கியமாக, தை அமாவாசை நன்னாளில், நான்கு பேருக்கேனும் தயிர்சாதம் வழங்குவோம். தயிர்சாத தானம் வாழ்வை வளமாக்கும். முன்னோர்கள் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம்.
தை அமாவாசையன்று மறக்காமல் பித்ருக் கடமையைச் செய்வோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in