Last Updated : 10 Feb, 2021 11:41 AM

 

Published : 10 Feb 2021 11:41 AM
Last Updated : 10 Feb 2021 11:41 AM

தை அமாவாசையில் தானம் செய்வோம்!  முன்னுக்கு வரச் செய்யும் முன்னோர் வழிபாடு! 

முன்னோருக்கு உகந்த தை அமாவாசையில் தானங்கள் செய்வதும் முன்னோரை வணங்குவதும் எண்ணற்ற பலன்களை வழங்கும். இதுவரை பட்ட துன்பங்களிலிருந்தெல்லாம் நிம்மதியும் நிறைவும் பெற்று உயரலாம் என்பது ஐதீகம்.

அமாவாசை என்பது மிக முக்கியமான நாள். நம் முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள். பித்ருக்களுக்கான முக்கியமான நாட்களில், அமாவாசை தினம் மிக மிக விசேஷமானது என்கிறது சாஸ்திரம்.

அமாவாசையில் தை அமாவாசை என்பது ரொம்பவே முக்கியம். இன்னும் இன்னுமான விசேஷமானவை. இந்தநாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். இந்த நாளில் கடற்கரையிலும் நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வார்கள். வீட்டில் இருந்தும் வழிபடலாம். தர்ப்பணம் செய்யலாம்.

அமாவாசை நாளில், நாம் செய்கிற தர்ப்பண ஆராதனைகள், முன்னோர்களுக்கான வழிபாடுகள், செய்கின்ற தான தருமக் காரியங்கள் என பலவற்றாலும் பித்ருக்கள் குளிர்ந்து போகிறார்கள். நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தானம் செய்தாலே புண்ணியம், தரும காரியங்கள் செய்து வந்தாலே முந்தைய பிறவியின் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம். முக்கியமாக, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற ஒவ்வொரு தானத்துக்குமே ஒவ்வொருவிதமான பலன்கள் உள்ளன என்று அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம்.

அமாவாசை நன்னாளில், நம் முன்னோரை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் தானம் செய்தால், வறுமை நிலை மாறும். கடன் பிரச்சினையில் இருந்து மீளலாம். வஸ்திர தானம் செய்து வேண்டிக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அதிகமாகும். தீராத நோயும் தீரும்.

அமாவாசை தினத்தில், யாருக்கேனும் தேன் வழங்கி நமஸ்கரித்து பிரார்த்தனைகள் மேற்கொண்டால், சந்தான பாக்கியம் உண்டாகும். வீட்டில் பிள்ளைச் செல்வம் இல்லாத குறை நீங்கும்.

தீபம் மற்றும் விளக்கு தானமாகக் கொடுத்தால், பார்வைக் கோளாறுகள் நீங்கும். கண்ணில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அரிசி தானம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், நம் பாவங்கள் அனைத்தும் பறந்தோடும். எவருக்கேனும் நெய் தானம் செய்தால், தீராத நோய்கள் அனைத்தும் தீரும். பால் தானமாக வழங்கினால், துக்கமெல்லாம் தீரும். வருத்தமெல்லாம் மறையும். தயிர் தானமாகக் கொடுத்தால், இந்திரிய முதலான சுகங்களைப் பெறலாம். இல்லறத்தில் ஒற்றுமை நீடிக்கும்.

பழங்களை எவருக்கேனும் தானமாக வழங்கினால், புத்தியில் தெளிவு பிறக்கும். மனக்குழப்பங்கள் அகலும். தங்கம் தானமாக வழங்கினால் குடும்பத்திலும் குடும்ப உறுப்பினர்களிடமும் உள்ள தோஷங்களும் திருஷ்டிகளும் விலகும்.

வெள்ளி தானமாகக் கொடுத்தால், மனதில் நீண்டகாலத் துயரங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். நெல்லிக்கனியை தானமாக வழங்கினால், ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். தேங்காய் தானமாக யாருக்கேனும் வழங்கினால், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என தர்மசாஸ்திரம் விளக்குகிறது.

நாளைய தினம் 11ம் தேதி வியாழக்கிழமை அமாவாசை. தை அமாவாசை. இந்தநாளில், தர்ப்பண காரியங்கள் செய்வோம். முன்னோர் படங்களுக்கு மாலையிட்டு வணங்குவோம். காகத்துக்கு உணவிடுவோம். நம்மால் முடிந்த தானங்களைச் செய்து, நலமுடனும் வளமுடனும் வாழ்வோம். சகல ஐஸ்வரியங்களுடன் நம்மை இனிதே வாழச் செய்வார்கள் பித்ருக்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x