

தை அமாவாசையில் முன்னோரை வணங்குவோம். அவர்களின் ஆசியைப் பெறுவோம்.
அமாவாசை என்பது நம் வாழ்வில் மிக முக்கியமான நாள். அமாவாசை நன்னாளில், எந்தக் கிரகமும் சூன்யம் அடையாது என்கிறது சாஸ்திரம். இதுவே அமாவாசை திதியைக் கொண்டாட முக்கியக் காரணமாகச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அமாவாசை என்று நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் அந்த வழிபாட்டின் பலன் மும்மடங்காகக் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். அதிலும் முக்கியமாக அமாவாசை நாளில், முன்னோர் வழிபாட்டை அவசியம் மேற்கொள்ளவேண்டும். அமாவாசை என்பது பித்ருக்களுக்கான நாள்.
ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு, மாதந்தோறும் வருகிற அமாவாசை, மகாளயபட்ச காலத்தின் பதினைந்து நாட்கள், கிரகண நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணம் செய்யவேண்டும் என அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.
மாதந்தோறும் வருகிற அமாவாசை என்பது பித்ரு வழிபாட்டுக்கான நாள்தான் என்றபோதும் ஒரு வருடத்துக்கு மூன்று முக்கியமான அமாவாசைகள் உள்ளன. ஆடி மாதத்தில் வருகிற அமாவாசை. அடுத்து புரட்டாசி மாதத்தில் வருகிற அமாவாசை. மூன்றாவதாக... தை அமாவாசை.
தை அமாவாசை நாளில், தர்ப்பணம் செய்யவேண்டும். நம் முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களையும் நம்முடைய கோத்திரத்தையும் சொல்லி எள்ளும் தண்ணீரும் விடவேண்டும். முன்னோர்களின் படங்களுக்கு மாலையிட்டு அலங்கரித்து, நமஸ்கரித்து பிரார்த்திக்கவேண்டும்.
தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் அமாவாசை நன்னாளில், அவசியம் காகத்துக்கு உணவிடவேண்டும். நம்முடைய முன்னோர்களுக்கு நாம் விடுகிற எள்ளும்தண்ணீரும் காகத்துக்கு வைக்கப்படுகிற உணவும் முன்னோர்களுக்குப் போய்ச் சேருகிறது என்றும் அவர்கள் மகிழ்ந்து நம்மையும் நம் சந்ததியினரையும் ஆசீர்வதிக்கிறார்கள் என்றும் விளக்குகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
11ம் தேதி வியாழக்கிழமை, நாளைய தினம் தை அமாவாசை. மறக்காமல் முன்னோரை வணங்குவோம். தர்ப்பணம் முதலான காரியங்களில் ஈடுபடுவோம். நம்முடைய முன்னோருக்கு படையலிட்டு காகத்துக்கு உணவிடுவோம்.
அமாவாசை நாளில், காவிரி, தாமிரபரணி முதலான நீர்நிலைகளில், ஆறு மற்றும் குளக்கரைகளில் பித்ரு தர்ப்பணம் செய்வது உன்னதமானது. இன்னும் மகத்துவம் நிறைந்தது. நம் சந்ததி சிறப்புற செம்மையாக வாழவேண்டுமெனில், நம் மூதாதையரை வணங்கவேண்டும் என்பதை மனதில் கொண்டு, பித்ருக்களை மனதார வழிபடுவோம்!