

மலை அடிவாரத்திலிருந்து ஆண்டவர் குடியிருந்த கோயிலை அடைய மக்கள் முதலில் நடந்துதான் சென்றார்கள். ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும், அரசர்களும், ஆண்டிகளும், இல்லறத்தானும், துறவியும் நடந்துதான் அடைந்ததாய் அறிகின்றோம்.
நடைபாதையின் பயணத்தூரம் பதினோரு கிலோமீட்டர் பயணக்காலம் 4 மணி நேரம். மலைப்படிக்கட்டுகள் மொத்தம் 3600. இதில் முதல் 2100 படிக்கட்டுகள் மட்டுமே கரடுமுரடானவை. சற்று ஏறுவதற்குக் கடினமாய் இருக்கும் அவற்றைக் கடந்துவிட்டால் மற்ற படிகளை எளிமையாக ஏறிவிடலாம். வேண்டுதலுக்காக மலை ஏறுதல் உண்டு. மாதம் ஒரு முறை மலை ஏறுதலை வழக்கமாய் கொண்ட பக்தர்களும் உளர். உடல் வருத்தம் தரும் மலை ஏற்ற முயற்சி உயிருக்கு உன்னதமானதாகும்.
பக்தர்கள் நடந்து செல்வதற்கு இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று யானையடிப்பாதை. இரண்டாவது படிக்கட்டுப்பாதை.
யானையடிப்பாதை
இது சந்திரகிரியிலிருந்து தொடங்குகிறது. யானை மீது அக்காலத்தில் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். அவற்றின் பாதம் படியும்படி அகலமான படிகள் இங்கு காணப்படுகின்றன. எனவே இப்பாதைக்கு யானையடிப்பாதை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. தற்போது பெரும்பாலோர் இதனைப் பயன்படுத்துவதுவதில்லை. காய்கனிகள், மளிகைப் பொருட்கள் கொண்டு செல்லவே இப்பாதை பயன்பட்டு வருகிறது.
படிக்கட்டுப்பாதை
இதனைச் சோபன மார்க்கம் என்பார்கள். ஆதிகாலம் தொட்டுப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.
மஹாபாரதம் எழுதிய வியாசமுனிவரிடமிருந்து அப்பயசித்த மகரிஷி திருமலை யாத்திரை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு முனிவர் கூறும் விடையே நடைப்பாதைக்கான வழியாக அமைகிறது என்று புராணம் கூறுகிறது. ஆழ்வார்களும், ஆச்சாரியர்களும் இப்பாதையைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன.