மாரியம்மன்களின் தலைவி சமயபுரத்தாள்! 

மாரியம்மன்களின் தலைவி சமயபுரத்தாள்! 
Updated on
1 min read


நம் மனதின் குறைகளை சமயபுரத்தாளிடம் அவளின் சந்நிதியில் நின்று முறையிட்டு மனதாரச் சொல்லி வேண்டிக்கொண்டால் போதும்... நம் குறைகளையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் வருத்தங்களையும் போக்கி அருளுவாள் சமயபுரத்தாள்!

உலகில் சக்தி பீடங்களின் தலைமையகமாகத் திகழ்வது காஞ்சிபுரம். தலைவியாகத் திகழ்கிறாள் காமாட்சி அம்மன். சக்தி பீடத் தலைவியாக காஞ்சி காமாட்சி அன்னை அருள்பாலித்து ஆட்சி செய்கிறாள். அதேபோல், உலகில் உள்ள மாரியம்மனின் தலைமை பீடமும் இருக்கிறது. அது... சமயபுரம்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். கோயில் இல்லாத ஊருமில்லை. ஊருக்கொரு மாரியம்மன் கோயிலாவது இருக்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். கடல் கடந்தும் கூட மாரியம்மனுக்கு கோயில் அமைந்துள்ளது. இப்படியான மாரியம்மன் கோயில்களுக்கெல்லாம் தலைமை பீடமாக சமயபுரம் திருத்தலமும் தலைவியாக சமயபுரத்தாளும் அமைந்திருப்பதாகச் சொல்லுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருச்சியின் எல்லைத் தெய்வமாகவும் காவல்தெய்வமாகவும் அமர்ந்திருக்கிறாள் ஸ்ரீமாரியம்மன். காக்கும் தெய்வம் என்று புகழப்படுகிறாள் மாரியம்மன்.
சமயபுரம் மாரியம்மன், பேசும் தெய்வமாகவே திகழ்கிறாள். காவல் தெய்வமாகவே போற்றப்படுகிறாள். காக்கும் தெய்வமாகவே வணங்கப்படுகிறாள்.

மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்தபடி, தன்னுடைய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார்.பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம் தெப்பக்குளம் இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல விருட்ச வேப்ப மரம்.

சமயபுரம் மாரியம்மனுக்கு வருடத்தின் பல நாட்கள் திருவிழா என்றாலும் வருடம் முழுவதுமே இங்கு தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம்தான். உலகில் எங்கிருந்தெல்லாமோ வந்து சமயபுரத்தாளைத் தரிசித்துச் செல்கின்றனர் பக்தர்கள்.

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா முதலான விழாக்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.

தை செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தை மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்வார்கள் பக்தர்கள். மாவிளக்கு ஏற்றுதல், முடி காணிக்கை செலுத்துதல், உடல் உறுப்புகள் மாதிரி பொம்மைகளை சமர்ப்பித்தல், உப்புக் காணிக்கை செலுத்துதல் முதலான எண்ணற்ற நேர்த்திக்கடன்களைச் செல்கிறார்கள் பக்தர்கள்.

நம் மனதின் குறைகளை சமயபுரத்தாளிடம் அவளின் சந்நிதியில் நின்று முறையிட்டு மனதாரச் சொல்லி வேண்டிக்கொண்டால் போதும்... நம் குறைகளையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் வருத்தங்களையும் போக்கி அருளுவாள் சமயபுரத்தாள்!

தை மாதத்தில், சமயபுரம் மாரியம்மனை தரிசிப்போம். வாழ்வில் நம்மை ஒரு தாயைப் போல் பரிவு காட்டி வளமும் நலமும் தந்தருளுவாள் மாரியம்மன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in