

கோமதி அம்பாளை தை வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் தரிசிக்கவேண்டும். எந்த வெள்ளியிலும் தரிசிக்கலாம் என்றாலும் தை வெள்ளி ரொம்பவே விசேஷமானது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
தென் தமிழகத்தில், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்பவர்கள், தங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைக்கு வைக்கும் பெயர்... கோமதி. சங்கரன்கோவிலில் இருந்துகொண்டு, அகிலத்தையே பரிபாலனம் பண்ணும் அரசியாகவே திகழ்கிறாள் ஸ்ரீகோமதி அன்னை.
சங்கரன்கோவிலில் பிரமாண்டமாக அமைந்துள்ளது சங்கரநாராயணர் திருக்கோயில். இங்குதான், சங்கரராக சிவனாரும் நாராயணராக மகாவிஷ்ணுவும் சங்கர நாராயணராக அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம்.
சைவமும் வைணவமும் பேதமின்றித் திகழும் திருத்தலம் இது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை வலியுறுத்தும் ஆலயம் இது.
ஒருகாலத்தில், சங்கரநயினார்கோவில் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இதுவே மருவி சங்கரன் கோவில் என அழைக்கப்பட்டது. ராசபுரம் என்றும் பூ கயிலாயம் என்று புராணம் இந்தத் தலத்தைக் குறிக்கப்படுகிறது. மேலும் புன்னைவனம் என்றும் கூழை நகர் என்றும் சங்கரன் கோவில் ஸ்தலத்தைக் குறிப்பிடுகின்றன ஞானநூல்கள்.
கோமதியம்மன் சிவனாரை மனமுருகி கடும் தவம் மேற்கொண்டு வழிபட்ட திருத்தலம் இது. இந்திரனும் பைரவ மூர்த்தியும் கடும் தவம் இருந்து வரம் பெற்றத் தலமும் இதுவே. சூரிய பகவானும் அக்னி பகவானும் தேவர் பெருமக்களும் அகத்திய மாமுனிவரும் வழிபட்ட புண்ணிய க்ஷேத்திரம் என்றெல்லாம் பெருமைகளைக் கொண்ட தலமாகத் திகழ்கிறது சங்கரன்கோவில்.
கொள்ளை அழகும் கருணைத் ததும்பும் கண்களுமாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் கோமதி அம்பாள்.
ஒருமுறை ‘சிவன் பெரியவரா... பெருமாள் பெரியவரா?’ எனும் சந்தேகம் பார்வதிதேவிக்கு வந்தது. தன்னுடைய குழப்பத்தை சிவனாரிடமே கேட்டாள் தேவி. இதைக் கேட்டு நகைத்தார் சிவனார். ‘பூலோகத்தில் பசுக்கள் நிறைந்த புன்னைவனத்துக்கு செல்வாயாக. அங்கே சென்று தவமிருந்து வழிபட்டு வா. உன் சந்தேகத்துக்கு அங்கே விடை கிடைக்கும்’ என அருளினார் சிவபெருமான்.
அதன்படி பூலோகம் வந்தாள் தேவி. புன்னைவனத்தை அடைந்தாள். தவத்தில் ஆழ்ந்தாள். அங்கே சிவனாரை நோக்கி கடும் தவம் புரிந்தாள். பலகாலமாக இருந்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. தேவியின் சந்தேகத்தை சிவனார் தீர்ப்பது என திருவுளம் கொண்டார்.
கடக ராசியில் சூரியனார் பிரவேசித்தார். சந்திர பகவான் மகர ராசியில் இருந்து தன் சொந்த வீட்டை ஏழாம் பார்வையாகப் பார்த்தார். ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில், நள்ளிரவில் தேவிக்கு முன்னே வந்து நின்றார் ஈசன். தன் உடலின் சங்கரனாகவும் இன்னொரு பாதியை நாராயணனாகவும் ஆக்கி திருக்காட்சி தந்தருளினார். சங்கர நாராயணராகக் காட்சி தந்தார். இதன் மூலம் ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்ந்து சிலிர்த்தாள் அம்பிகை. மேலும் உலகுக்கே இதனை உணர்த்தி அருளினார் சிவனார்.
மீண்டும் சிவனாரின் வழக்கமான திருமேனியைத் தரிசிக்க எண்ணி, தவம் மேற்கொண்டாள். பின்னர், தனது சுயரூபத்தைக் காட்டி அருளினார் சிவபெருமான். அடுத்து தவத்தின் பலனாக திருமணம் கொண்டார் என்றும் கோமதி அம்பாள் அங்கே கோயில் கொண்டு அருளாட்சியைத் தொடங்கினாள் என்றும் விவரிக்கிறது சங்கரன் கோவில் ஸ்தல புராணம்.
கோமதி அம்பாளை தை வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் மறக்காமல் தரிசிக்கவேண்டும். எந்த வெள்ளியிலும் தரிசிக்கலாம் என்றாலும் தை வெள்ளி ரொம்பவே விசேஷமானது என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
கோமதி அம்பாளை வணங்குவோம். குறைவின்றி வாழ்வோம்!