Last Updated : 26 Nov, 2015 11:59 AM

 

Published : 26 Nov 2015 11:59 AM
Last Updated : 26 Nov 2015 11:59 AM

18 படி தத்துவம்

மாலை அணிதல் : ஐயப்ப பக்தர்கள் தம் காதுகளின் வழி ஓங்காரப் பேரொளியான ‘ஸ்வாமியே சரணம்' என்ற உபதேச மொழியைத் தம் குருஸ்வாமிகள் மூலம் உள்வாங்கி, அவ்விறைவனுக்கு அடிமை என்பதை உணர்த்த மாலை அணிதல்.

நீராடல்: மெய் உணர்ச்சியை வெல்லும் பொருட்டு சூரிய உதயத்திற்கு முன்னும், மாலையும் இருவேளை நீராடி சரீர உணர்வுகளை சமப்படுத்தல்.

உருவம்: காணும் அனைத்திலும் இறைவன் இருப்பதை உணர்த்தும் பொருட்டு தம் கண்ணில் காணும் அனைத்திலும் அய்யன் இருப்பதாக எண்ணி வணங்குதல்.

ரஸம்: நாவைக் கட்டுப்படுத்தும் பொருட்டு நினைத்த நேரம் உண்ணாமல், தினம் ஒருவேளை மட்டுமே சாத்வீக உணவுகளை உண்ணுதல்.

கந்தம்: பாச உணர்வுகளிலிருந்து ஒதுங்கி எந்நேரமும் இறை உணர்வுடன் வேறு தேவையற்ற நினைவுகளில் இருந்து விலகி இருத்தல்.

வசனம்: அனைத்து மானிடரையும் இறை அம்சமாகக் கருதி ‘சாமி' என்று அழைத்தலும், இருவேளை சரணம் விளித்தலும்.

கமனம்: இரண்டு வேளையும் இறைவழிபாடு செய்வதால் தீய செயல்களில் மனம் ஈடுபடாதிருத்தல்.

தானம்: இயன்ற அளவு தானமும், தர்மமும் செய்தல்.

விசர்க்கம்: பொய், களவு, காமம், சூது, வாது இவற்றை ஒழித்து பிரம்மச்சரிய விரதம் காத்தல்.

ஆனந்தம்: மேலே விவரித்த வழிகளில் விரதம் கடைப்பிடிப்பதால் ஒரு புதிய சக்தியும், புனித உணர்வும் ஏற்படும். ஆத்ம சக்தி நிறைந்த ஆனந்த நிலை பேரின்ப பரமானந்த நிலை பெற கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

மனம்: மனதை அடக்கி, துறவு நிலையைக் குறிக்கும் காவி, கருப்பு, நீல வண்ண ஆடைகளை அணிதல்.

புத்தி: மாலை அணிதல் : மனம் ஒடுங்கி இறைவனைப் பற்றிய எண்ணமும், சிந்தனையும் மனத்தில் தோன்றி நல்லொழுக்கங்களுக்கு மனம் கட்டுப்படுவதே புத்தி.

அகங்காரம்: முறையான விரத விதிகளைக் கடைப்பிடிப்பதால் ‘நான்' என்ற ஆணவம் அழிந்து பாத நமஸ்காரம் செய்தல்.

சித்தம்: எந்தத் துன்பம், இடர் ஏற்பட்டாலும் இறைவனை அடைந்தே தீருவேன் என்ற திடமான வைராக்கியம் ஏற்பட்டு இருமுடி சுமத்தல். நாம் செய்யும் பாவம், புண்ணியம் மட்டுமே நம்முடன் வருவதை உணர்தல். ஒரு முடியில் ஐயப்பனின் பொருட்கள்; மற்றொன்றில் தனக்காக எடுத்துச் செல்லும் ஆகாரம், யாத்திரையின் சமயம் குறைவதுபோல தான, தர்மம் செய்து பாவச் சுமையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இதனால் சித்த சுத்தி கிடைக்கும்.

சொப்பனம்: கனவில் கண்ட வற்றை மறந்துவிடுவது போல மேலே கூறப்பட்ட பதினான்கு நிலைகளையும் அடக்கி ஆளும் நிலை பெற்றுவிட்டதைக் குறிப்பதே எரிமேலி பேட்டைத் துள்ளல் என்ற வேட்டை ஆடும் நிலை.

சுழுத்தி: கருவி, கரணாதிகளை வென்று தன்னிறைவு பெற்றதன் அடையாளமாகத் தெளிந்த நீர் ஓடும் மணிமேகலை நதியில் நீராடுதல்.

துரியம்: துரிய நிலையைப் பற்றிக்கொண்டிருக்கும் இரண்டு கரணங்களில் ஒன்றை அழுதா நதியில் நீராடிக் கரைத்து, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்துக் கொண்டு அதை இன்னொரு கரணமாகப் பாவித்து, அதையும் பாதி வழியிலேயே விட்டொழித்த அடையாளமாக அக்கல்லைக் கல்லிடும் குன்றில் எரிந்து விடுதலாம்.

துரியாதீதம்:

இறைவனைத் தரிசித்து அவரின் ஜோதி ஸ்வரூபத்தில் இரண்டறக் கலந்த துரியாதீத நிலையே பம்பா நதியில் நீராடி 18 படிகள் ஏறி ஐயனை தரிசிக்கும் பேறாகும்.

இதன் பின் சபரி பீடத்தில் நடக்கும் ஆனந்தக் கூத்து, மகரஜோதி ஆகியவை ஐயன் ஐயப்ப சுவாமியின் தேவாம்ச சித்து விளையாட்டுகளாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x