

தை மாத வெள்ளிக்கிழமையில், பாகம்பிரியாளை மனதார வழிபட்டு வந்தால், மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவாள். மங்காத செல்வத்தைத் தந்திடுவாள் என்பது ஐதீகம்! கல்யாணத் தடைகளையெல்லாம் நீக்கித் தந்திடுவாள். சந்தான பாக்கியத்தைக் கொடுத்திடுவாள் பாகம்பிரியாள்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது திருவெற்றியூர். காரைக்குடியில் இருந்து தேவகோட்டை வழியாக, திருவாடானையை அடையலாம். மதுரையில் இருந்து சிவகங்கை, காளையார்கோவில் வழியாகவும் திருவாடானையை அடையலாம். இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெற்றியூர். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உட்பட்ட ஆலயம் இது.
இந்தக் கோயில் குறித்து ஸ்தல புராணம் விவரிப்பதைப் பார்ப்போமா?
மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட திருமால், வாமன அவதாரம் எடுத்தார் என்பது தெரியும்தானே. அதன் பிறகு, பல தலங்களுக்கும் சென்றார். அப்படியே திருவாடானை தலத்துக்கு வந்தவர், அங்கே குடிகொண்டிருக்கும் ஈசனை வணங்கினார். அப்போது, ‘’இங்கேயுள்ள வனத்தில், வன்மீகத்தில் (புற்று) குடிகொண்டிருக்கும் என்னை வணங்கி வா!’’ என்றருளினார் சிவனார். அதன்படி, புற்றுக்குள் லிங்க ரூபமாகத் திகழ்ந்த சிவனாரை வணங்கி வழிபட்டார் திருமால். பின்னாளில், திருமால் வணங்கிய ஈசனுக்கு பிரமாண்டமாகக் கோயில் எழுப்பினர் மன்னர் பெருமக்கள். அத்துடன், புற்றுக்குள் இருந்ததால், ஈசனுக்கு ஸ்ரீவன்மீகநாதர் எனத் திருநாமம் சூட்டி வழிபடத் தொடங்கினார்கள்.
வன்மீகம் என்றால் புற்று என்று அர்த்தம். ஒருகட்டத்தில், அந்த வனப்பகுதி, அழகிய கிராமமாக வளர்ந்தது. இங்கு உள்ள ஈசனை வணங்கித் தொழுதால், தொட்டதெல்லாம் துலங்கும்; எடுத்த காரியமெல்லாம் வெற்றியாகும் என்பதால், ஊருக்கு திருவெற்றியூர் என்றே பெயர் அமைந்தது.
ஸ்ரீவன்மீகநாதர்தான் இத்தலத்தின் நாயகன். ஆனால் பல வீடுகளில் மனைவியின் ராஜாங்கமும் ஆட்சியும் நடப்பது இயல்புதானே. இங்கே அம்பாளின் ராஜ்ஜியம்தான்! அவளது பெருங்கருணையில் ஊரும் செழித்தது; ஊர்மக்களும் சிறப்புற்றனர். தேவியின் திருநாமம் அவிர்பக்த நாயகி! இவளுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது அது... ஸ்ரீபாகம்பிரியாள்.
சதாசர்வகாலமும் சதாசிவத்தைப் பிரியாதிருப்பவள். உமையொருபாகன் எனப் பெயர் பெற்று, ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்திய சிவபெருமானை, நிமிடம் கூடப் பிரிவதற்கு மனமில்லாதவள்; உடலில் சரிபாகம் கொடுத்த கணவனுக்குள் புகுந்து, அவனுடன் இரண்டறக் கலந்தவள் என்றெல்லாம் சிலாகித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள்!
கனிவும் கருணையுமாக அருளாட்சி நடத்துகிற ஸ்ரீபாகம்பிரியாள்தான், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்து மக்களின் கண்கண்ட தெய்வம்! குறிப்பாக, பெண்களின் இஷ்டதெய்வம்.
சுடர் மின்னுகிற கண்களும் சாந்தமான முகமும் கொண்டு அற்புதக் காட்சி தருகிறாள், பாகம்பிரியாள். இவளைத் தரிசித்து வணங்கிய பெரியோர்கள் பாகம் பிரியாளைத் தங்களின் குழந்தையாகவே பாவித்தனர். தங்களது நிலத்தின் சிறுபகுதியை ஸ்ரீபாகம்பிரியாள் பெயருக்கு பட்டா எழுதி வைத்தனர். ஒரு கட்டத்தில், தங்களின் மகள்களை ஸ்ரீபாகம்பிரியாளாகவே எண்ணிச் சிலிர்த்தனர். அவர்களது பெயர்களில் நிலங்களை எழுதி வைத்து அழகுபார்த்தனர்.
கருவறையில், அழகே உருவெனக் கொண்டு, சாந்த சொரூபினியாக, கருணைக் கடலாகக் காட்சி தருகிறாள் ஸ்ரீபாகம்பிரியாள்.
தை மாத வெள்ளிக்கிழமையில், பாகம்பிரியாளை மனதார வழிபட்டு வந்தால், மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளுவாள். மங்காத செல்வத்தைத் தந்திடுவாள் என்பது ஐதீகம்! கல்யாணத் தடைகளையெல்லாம் நீக்கித் தந்திடுவாள். சந்தான பாக்கியத்தைக் கொடுத்திடுவாள் பாகம்பிரியாள்!