தம்பதி ஒற்றுமைக்கு திருக்கடையூர் பாட்டு! 

தம்பதி ஒற்றுமைக்கு திருக்கடையூர் பாட்டு! 
Updated on
1 min read

அபிராமி அந்தாதியை முழுவதுமாகச் சொல்ல இயலாத நிலையில், அப்படியான தருணத்தில், அபிராமி பட்டர் அருளிய இந்தப் பாடலை அபிராமி அந்தாதி சொன்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிவிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

திருக்கடையூர் என்றதும் நம் நினைவுக்கு வருபவள் ஸ்ரீஅபிராமி அன்னை. கருணையும் கனிவுமாக ஆட்சி நடத்தும் அபிராமி அம்பாளை நினைக்கும் போதே, அபிராமி அந்தாதியையும் அந்தாதியைத் தந்த அபிராமிபட்டரையும் நினைத்துப் பூரிப்போம்.

மயிலாடுதுறைக்கு அருகில், பூம்புகாருக்கு அருகில் அமைந்துள்ளது திருக்கடையூர். இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர். மார்க்கண்டேயனுக்கு ஆயுள் பலம் தந்த ஒப்பற்ற திருத்தலம். எமனின் பாசக்கயிறையே வென்றெடுத்த புண்ணிய க்ஷேத்திரம்.
அதனால்தான் திருக்கடையூர் தலத்துக்கு வந்து, அமிர்தகடேஸ்வரரையும் அபிராமி அன்னையையும் மனதார வணங்கிச் சென்றால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம்.

அதுமட்டுமா? திருக்கடையூர் திருத்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான வைபவங்களை, ஆலயத்தில் செய்துகொள்வது ரொம்பவே விசேஷமானது. இப்படி அறுபதாம் கல்யாணம், பீமரதசாந்தி, சதாபிஷேகம் என விசேஷங்களைச் செய்யும் ஆலயங்கள் மிக மிகக் குறைவு. அப்படியான தலங்களில் ஒன்றானதும் மிக முக்கியமானதுமான திருத்தலம் திருக்கடையூர் என்று போற்றப்படுகிறது.

அபிராமி பட்டர் அவதரித்த பூமி இது. இவர் அருளிய அபிராமி அந்தாதியை பாராயணம் செய்வதும் பாராயணம் செய்து சிவ வழிபாடு செய்வதும் தம்பதி இடையே ஒற்றுமையை பலப்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேசமயம், அபிராமி அந்தாதியை முழுவதுமாகச் சொல்ல இயலாத நிலையில், அப்படியான தருணத்தில், அபிராமி பட்டர் அருளிய இந்தப் பாடலை அபிராமி அந்தாதி சொன்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிவிக்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

அபிராமி அந்தாதிக்கு இணையான அந்தப் பாடல்...

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை
மா தேவி நின்னை சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி, தன தானியம்
அழகு, புகழ் பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி
துணிவு , வாழ்நாள், வெற்றி ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி, நீ சுக ஆனந்த
வாழ்வு அளிப்பாய்; சுகிர்த குணசாலி, பரிபாலி அநுகூலி
திரிசூலி, மங்கல விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்க ஓணாதோ? மகிமை வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!

எனும் பாடலை 11 முறை சொல்லுங்கள்.

வீட்டில் விளக்கேற்றி தம்பதியாகவோ தனியாகவோ அமர்ந்தும் இந்தப் பாடலைச் சொல்லி வழிபடலாம். அல்லது அருகில் உள்ள சிவ ஸ்தலத்துக்குச் சென்று சிவனாரையும் அம்மையையும் தரிசிக்கும் போதும் சொல்லி வழிபடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in