Last Updated : 03 Feb, 2021 03:05 PM

 

Published : 03 Feb 2021 03:05 PM
Last Updated : 03 Feb 2021 03:05 PM

நரசிம்மருக்கு குளிரக்குளிர பானகம்!

நரசிம்ம வழிபாடு என்பது வலிமை மிக்கது. வலிமையைத் தந்தருளக் கூடியது. திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் உள்ள நரசிம்மப் பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. நரசிம்ம பெருமாளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருவல்லிக்கேணியில் தை மாத பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடந்துகொண்டிருக்கிற வேளையில் நரசிம்மப் பெருமாளை கண்குளிர தரிசிப்போம்; மனதாரப் பிரார்த்திப்போம்.

துர்குணம் கொண்டவர்களை அழிக்காமல் விடமாட்டார் மகாவிஷ்ணு என்பதை நாம் அறிவோம். அதேபோல், நற்குணம் கொண்டவர்களை எப்போதும் காத்தருள்வார் மகாவிஷ்ணு. இந்த இரண்டுக்கும் உதாரணங்கள் பல உண்டு என்றாலும் மிக முக்கியமான அவதாரமாகப் போற்றப்படுகிறது நரசிம்ம அவதாரம்.

இரணியனை அழிக்கவும் பிரகலாதனைக் காக்கவுமாக பெருமாள் எடுத்த அவதாரம் இது என்கிறது விஷ்ணு புராணம். மகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில், நரசிம்ம அவதாரம் மட்டுமே மிகக்குறைந்த காலத்தில் நடந்து முடிந்ததாக விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காலையும் இல்லாத மாலையும் இல்லாத அந்தி சாயும் நேரம்தான் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. அதேபோல், வீட்டுக்குள்ளேயும் மரணம் நிகழக்கூடாது, வெளியேயும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்று இரணியன் வரம் வாங்கியிருந்தான், அதன்படி, வீட்டுக்குள்ளேயும் அவனுக்கு மரணம் நிகழவில்லை. வெளியேயும் மரணம் நிகழ்த்தவில்லை. வாசலில் இருந்தபடியே மரணத்தை வழங்கினார் நரசிம்மப் பெருமாள்.
அதுமட்டுமா? மனித உடலுடனும் மிருக முகத்துடனும் திருக்காட்சி தந்தார் நரசிம்மர். தூணில் இருந்து பிளந்துவந்து, சிம்மமாக கர்ஜித்து இரணியனை மடியில் கிடத்தி கொன்றொழித்தார் என்கிறது புராணம்.

நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிற நேரம், மாலை 4.30 முதல் 6 மணி வரை எனும் காலம். சிவாலயங்களில் பிரதோஷ பூஜை என்பது விமரிசையாக நடைபெறும். பிரதோஷ நேரம் என்பதும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம்தான். அதனால்தான் பிரதோஷ நன்னாளில் நரசிம்மரை தரிசிப்பதும் நரசிம்மப் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதும் விசேஷமானதாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நரசிம்மருக்கு உகந்த நைவேத்தியமாக பானக நைவேத்தியத்தைச் சொல்லுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இரணியனை அழித்த பின்னரும் உக்கிரம் தணியாமல் இருந்தாராம் நரசிம்மர். அதனால்தான் குளிரக் குளிர பானகமானதை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள்.

புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் நரசிம்மரை தரிசனம் செய்வதும் மனதார அவரைப் பிரார்த்தனைகள் செய்வதும் மிகுந்த விசேஷமானது என்றும் பானக நைவேத்தியம் செய்தும் துளசி மாலை சார்த்தியும் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வேண்டிக்கொள்வது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும் என்றும் மெய்சிலிர்க்க தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

நரசிம்ம க்ஷேத்திரங்கள் என்றே தனியே அமைந்திருக்கின்றன. பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள் என்றும் இருக்கின்றன. விழுப்புரம் அருகே ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் திருத்தலங்கள் அமைந்துள்ளன.

மதுரை ஒத்தகடையில் ஆனைமலை நரசிம்மர் ரொம்பவே விசேஷம். ஸ்ரீரங்கத்திலும் நரசிம்மர் அற்புதமாகக் காட்சி தந்தருள்கிறார். செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கபெருமாள் கோயிலில், அற்புதமாகவும் சாந்நித்தியத்துடனும் தனிக்கோயிலில் இருந்தபடி சேவை சாதிக்கிறார் நரசிம்மப் பெருமாள்.

சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் உள்ள நரசிம்மப் பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி. நரசிம்ம பெருமாளை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். திருவல்லிக்கேணியில் தை மாத பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடந்துகொண்டிருக்கிற வேளையில் நரசிம்மப் பெருமாளை கண்குளிர தரிசிப்போம்; மனதாரப் பிரார்த்திப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x