Last Updated : 02 Feb, 2021 08:02 PM

 

Published : 02 Feb 2021 08:02 PM
Last Updated : 02 Feb 2021 08:02 PM

கலை, கல்வியில் ஜெயிக்கச் செய்வார் சதுரங்க வல்லபநாதர்! 

பூவனூர் திருத்தலத்துக்கு வந்து சதுரங்க வல்லபநாதரையும் ஸ்ரீராஜராஜேஸ்வரியையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரரையும் மனதார வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளெல்லாம் தகர்த்து அருளுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பூவனூர் திருத்தலம். நீடாமங்கலத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். அற்புதமான இந்த ஊரில்தான், தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீசாமுண்டீஸ்வரி.

திருப்பூவனூர் என்றும் பூவனூர் என்றும் அழைக்கப்படுகிற இந்தத் தலத்தில் சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீபுஷ்பவன நாதர். இவருக்கு ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளுக்கு ஸ்ரீகற்பகவல்லி எனும் திருநாமம். ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறாள் அம்பாள்.
அதென்ன சதுரங்க வல்லபநாதர் என்ற பெயர்?

தெற்கே பாண்டிய நாட்டு மன்னன் வசுசேனன், மிகுந்த சிவபக்தி கொண்டவன். இவரின் மனைவி காந்திமதி. இவர்களின் ஒரே வருத்தம்... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே... என்பதுதான்! வேண்டாத தெய்வங்களில்லை... செய்யாத தர்மங்களில்லை. சதாசர்வ காலமும் சிவத்தையே நினைத்து மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தார்கள். அந்த ராஜதம்பதிக்கு அருளுவதற்கு திருவுளம் கொண்டார் சிவபெருமான்.

நீராடுவதற்காக குளத்துக்கு வந்தார் மன்னர். அங்கே தாமரை மலரில் சங்கு ஒன்றைக் கண்டார். அந்தச் சங்கினை கையில் எடுத்த போது, அந்தச் சங்கு பெண் குழந்தையாக உருவெடுத்தது. மனம் பூரித்து நெகிழ்ந்து போனார். ‘எம் சிவமே எம் சிவமே’ என்று நெக்குருகிப் போனார். அந்தக் குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி எனப் பெயரிட்டு வளர்த்தார்.

சப்தமாதர்களில் ஒருத்தியாகத் திகழும் சாமுண்டிதேவியானவள், ராஜராஜேஸ்வரிக்கு வளர்ப்புத்தாயாக இருந்து அரவணைத்து வளர்த்து வந்தாள். சகல கலைகளையும் கற்றுக் கொடுத்தாள்.

ராஜராஜேஸ்வரி, சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றாள். முக்கியமாக, சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரி வெல்லவே முடியாதவள் என்று போற்றப்பட்டாள்.
ராஜராஜேஸ்வரிக்கு உரிய வயது வந்தது. திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் மன்னர். மகளைப் போலவே, சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்குபவரையே திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்தார்.

மன்னரின் அறிவுப்புக்குப் பின்னர் ஒருநாள், சதுரங்கப் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு தேசத்தின் ராஜகுமாரர்களும் வந்திருந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியிடம் தோற்றுப் போனார்கள். மகளுக்கு ஏற்ற ஒரு வரனும் அமையவில்லையே என்பதுதான் பெருங்கவலையாக இருந்தது மன்னனுக்கு.
பல தலங்களுக்குச் சென்று வழிபட்டார் மன்னர். அப்படி தலங்களுக்கு வந்து மகளுடன் வணங்கி வந்தவர், திருப்பூவனூர் திருத்தலத்துக்கும் வந்தார். புஷ்பவனநாதரைத் தரிசித்தார். மனமுருக வேண்டினார்.

மறுநாள்... திருப்பூவனூருக்கு அருகே மன்னர் தங்கியிருந்த இடத்துக்கு வயதான பெரியவர் ஒருவர் வந்தார். அங்கே மன்னரின் மகளான ராஜராஜேஸ்வரியிடம், ‘என்னுடன் சதுரங்கம் விளையாடி ஜெயிக்க முடியுமா உன்னால்?’ என்று கேட்டார். இதைக் கண்டு மன்னர் கலங்கிப் பதறினார். ஆனால் மகளோ இதை ஓர் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விளையாட்டுக்கும் போட்டிக்கும் சம்மதித்தார்.

முதியவருக்கும் ராஜராஜேஸ்வரிக்கும் ஆட்டம் ஆரம்பமானது. சதுரங்க விளையாட்டில் முதியவர் வென்றார். மன்னர் வேதனை அடைந்தார். கொடுத்த வாக்குறுதிப்படி, மகளை திருமணம் செய்துவைக்க வேண்டுமே... அதுவும் கிழவருக்கா திருமணம் செய்துவைப்பது என்று கண்ணீருடன் சிவபெருமானை வேண்டினார். அப்போது, முதியவர் மறைந்தார். சிவபெருமான் தோன்றினார். நெடுஞ்சாணாக விழுந்து நமஸ்கரித்தார். ராஜராஜேஸ்வரியும் நமஸ்கரித்தார். சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரியை வென்றதால், புஷ்பவனநாதருக்கு சதுரங்கவல்லப நாதர் என்றும் மன்னருக்கு மகளாகப் பிறந்த உமையவளுக்கு, தலத்தின் கற்பகவல்லியுடன் ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமமும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். மேலும் பிராகாரத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.

பூவனூர் திருத்தலத்துக்கு வந்து சதுரங்க வல்லபநாதரையும் ஸ்ரீராஜராஜேஸ்வரியையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரரையும் மனதார வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளெல்லாம் தகர்த்து அருளுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x