

செவ்வாய்க்கிழமையும் பஞ்சமியும் வருகிற அற்புதமான இன்றைய நன்னாளில் (2ம் தேதி) ஸ்ரீவாராஹி தேவியை மனதார வழிபடுவோம். வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்வோம். நம் சஞ்சலமெல்லாம் போக்கி அருளுவாள். சந்தோஷத்தையெல்லாம் தந்திடுவாள்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். சக்திக்கு உரிய நாட்கள். அம்பாள் பல ரூபங்கள் எடுத்தவள் என்று போற்றுகிறது தேவி மகாத்மியம். அம்பாள் தன் சக்தியை பிரபஞ்சத்துக்கு ஒவ்வொரு ரூபமாக இருந்து வெளிப்படுத்தினாள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.
இச்சா சக்தி என்றும் கிரியா சக்தி என்றும் ஞானசக்தி என்றும் தேவி உலகெங்கும் வியாபித்திருக்கிறாள். தீயனவற்றையெல்லாம் அழித்து, துர்குணங்களையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பிகை.
கோயிலின் கருவறையில் அம்பாளாக வீற்றிருக்கிறாள். கோயிலின் கோஷ்டத்தில் துர்கையாக சந்நிதி கொண்டிருக்கிறாள். அதேபோல் சப்தமாதர்களாக, சப்த கன்னிகளாக தன் சக்தியை, பேரொளியை நமக்கெல்லாம் வழங்கிக் கொண்டிருக்கிறாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சப்தமாதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வ்வொரு தீயசக்தியை அழிப்பதற்கு அவதாரமாக வந்தவள். சப்த சாகரம் போல், சப்த லோகம் போல், சப்த ஸ்வரங்கள் போல் சப்த மாதர்களும் மிக மிக வலிமையான தெய்வங்கள். மகோன்னதமானவர்கள். இவர்களில், மிக முக்கியமான தெய்வமாக, சக்தி தேவியின் தளபதியாக, சேனாதிபதியாக, படையின் தலைவியாக வீற்றிருக்கிறாள் ஸ்ரீவாராஹி.
வாராஹியை வழிபட்டு வந்தால், எதிர்ப்புகள் அனைத்தும் காணாமல் போகும். எதிரிகள் பலமிழப்பார்கள். இன்னல்கள் இருந்த இடம் தெரியாது போகச் செய்வாள் தேவி.
வாராஹிக்கு உகந்தது பஞ்சமி திதி. செவ்வாய்க்கிழமை என்பது அம்பிகையை வழிபடுவதற்கு உரிய நாள். செவ்வாய்க்கிழமையும் பஞ்சமியும் இணைந்து வருவது விசேஷம்.
இன்றைய நாளில்... (2ம் தேதி) பஞ்சமியும் செவ்வாய்க்கிழமையும் இணைந்து வந்துள்ள இந்த நாளில், ஸ்ரீவாராஹி தேவியை வழிபடுவோம். செவ்வரளி மலர்கள் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். மனசஞ்சலத்தையெல்லாம் போக்கி அருளுவாள் வாராஹி. சந்தோஷத்தப் பெருக்கித் தந்திடுவாள் சப்த மாதர்களின் நாயகி!