

அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்புமுனைகளைக் கொண்டது. இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல்.
அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர். இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.
இவரது முற்பிறவிகள் குறித்த தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. அகத்திய முனிவர், நாயொன்றை வளர்த்து வந்தாராம். அந்நாய் தேவேந்திரனாக முதல் பிறவி எடுத்ததாம். பின்னர் அர்ச்சுனன், கண்ணப்ப நாயனார், நக்கீரர், அருணகிரிநாதர் என்ற வரிசையில் அந்நாய்க்குப் பிறப்புகள் உண்டானதாகத் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அருணகிரி புராணத்தில் காணக் கிடைக்கிறது. இதனைக் கட்டுக்கதை என்று மறுத்துக் கூறுபவர்களும் உண்டு. அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர்.
உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம். மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம். இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம். அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.
கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர். அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாக வெளியிட்டுள்ளது.