Published : 28 Jan 2021 17:16 pm

Updated : 28 Jan 2021 17:16 pm

 

Published : 28 Jan 2021 05:16 PM
Last Updated : 28 Jan 2021 05:16 PM

  வேலுண்டு வினையில்லை! 

thai-pournami


வேலுண்டு வினையில்லை என்பார்கள். யாமிருக்க பயமேன் என்று அருளியுள்ளார் முருகப்பெருமான். தை பெளர்ணமியும் தைப்பூசமும் இணைந்த நன்னாளில்... வேலவனைத் தொழுவோம். வேண்டியதைத் தந்திடுவேன் வெற்றிக்குமரன்.

தைப்பூசம் என்றதும் பழநியும் பாதயாத்திரையும்தான் ஞாபகத்துக்கு வரும்! குறிப்பாக, செட்டிநாட்டுப் பகுதி பக்தர்கள் நினைவுக்கு வருவார்கள்! பாதயாத்திரையாக பழநிக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டு வந்த பூமி... செட்டிநாடு! நகரத்தார், பிள்ளையார் சுழி போடுவார்கள். சிவமயம் என்று எழுதுவார்கள். ஆனாலும் முருகக் கடவுள் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்கள்! தங்கள் வாரிசுகளுக்கு அழகப்பன், பழநியப்பன், வேலப்பன், முருகப்பன், முருகம்மை, தெய்வானை, அழகம்மை, வள்ளியம்மாள் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்!


சுமார் 150 வருடங்களுக்கும் மேலாக காரைக்குடி முதலான ஊர்களில் இருந்து பழநி திருத்தலத்துக்கு பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. அதேபோல், பழநி என்றில்லாமல், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலங்கள் பலவற்றுக்கும் பாதயாத்திரை மேற்கொள்வார்கள் பக்தர்கள்.

ஆயக்குடி ஜமீனின் ராணிக்கு கடும் வயிற்றுவலி. இவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், பழநிக்கு நடந்து வருபவரிடம் விபூதி வாங்கிப் பூசிக்கொள்ளும்படி அருள... அதன்படியே வெள்ளை குமரப்பச்செட்டியார் என்பவர், விபூதி கொடுத்ததும் வலி காணாமல் போனதாம்! இதில் நெகிழ்ந்துபோன ஜமீனும் ராணியும் வருடந்தோறும் தைத் திருநாளின்போது, பொங்கல் சீர் அனுப்பி வைத்தனர் என்கின்றார்கள் பக்தர்கள்.

அரண்மனையில் இருந்து பொங்கல் சீர் வந்ததால், அரண்மனைப் பொங்கல்காரர்கள் வீடு என்றே பெயர் வந்ததாம்! இந்த வம்சத்தைச் சேர்ந்த பழனியப்பன், அவரின் சகோதரர் அழகப்பன் முதலானோர் அடுத்தடுத்து தொடர்ந்து பாதயாத்திரை சென்று வருகின்றனர். ஆயக்குடி ஜமீன் வழங்கிய தம்புரு, வாங்கா எனும் திருச்சின்னங்கள் (வாத்தியக் கருவிகள்) இசைக்க... இவர்கள் நடந்து வர... எட்டூருக்குக் கேட்குமாம் இந்த ஓசை என்று பாதயாத்திரைக் குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக, ஜாதகத்தின் ஆறாம் இடம் விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றைக் குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவர் முருகப்பெருமான்! அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற படை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது மிகுந்த விசேஷ பலன்களை அள்ளித் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது. மனம் குழம்பாது. சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம்! குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்.

முருகப் பெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச நன்னாளில், தை பெளர்ணமியில், மாலையில் விளக்கேற்றுவோம். முழுநிலவு நாளில், விளக்கேற்றி வழிபடுவோம். கந்தகுமாரனை வேண்டுவோம். சஷ்டி கவசம் பாடுவோம். சங்கடங்கள் தவிடுபொடியாகும். சந்தோஷம் பெருகும்!

தவறவிடாதீர்!வேலுண்டு வினையில்லை!முருக வழிபாடுமுருக தரிசனம்தைப்பூசம்தைப்பூச வழிபாடுதை பெளர்ணமிகுருவாரம்பழநி பாதயாத்திரைகாரைக்குடிசெட்டிநாட்டு மக்கள்MuruganPaadha yaathiraiThai poosamThai pournamiGuru vaaram

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x