

திருப்போரூர் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் விக்கிரகத் திருமேனி, கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது. வலது காலை மயில் மீது ஊன்றியிருக்கிறார். வில்லேந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சம்ஹார முத்துக்குமார சுவாமியை, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகளில் அல்லது ஆறு சஷ்டி திதிகளில் வந்து வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்வது எண்ணிலடங்காத பலன்களைத் தந்தருளும்.
கந்தசஷ்டி கவசத்தில், ‘சமராபுரிவாழ் சண்முகத்தரசே’ என்றொரு வாசகம் வரும். இந்த வாசகத்துக்கு உரிய திருத்தலம்... திருப்போரூர். சென்னைக்கு அருகேயுள்ள அற்புதமான முருகப்பெருமான் தலங்களில் திருப்போரூர் திருத்தலமும் ஒன்று.
தாரகன் எனும் அசுரனுடன் போரிட்ட தலம் என்பதால், போரூர் என்றும் சமராபுரி என்றும் தாருகாபுரி என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தலபுராணம்.
முன்னொரு காலத்தில் இந்த ஆலயமானது மண்ணில் புதையுண்டு போனது. முருகப்பெருமானின் விக்கிரகமானது பனை மரத்தடியில் இருந்தது. மதுரையைச் சேர்ந்த சிதம்பர சுவாமிகள் என்பவரின் கனவில் தோன்றி, தான் இருக்குமிடத்தை தெரிவித்தாராம்.
இதையடுத்து சிதம்பர சுவாமிகள், இங்கு வந்து முருகப்பெருமானின் சிலையை கண்டெடுத்தார். சிலையின் அழகைக் கண்டு வியந்து போனார். சிலையைப் பிரதிஷ்டை செய்தார். காடும்மேடுமாக, குண்டும்குழியுமாக இருந்த கோயில் பகுதியைச் சீராக்கினார். ஆலயம் எழுப்பப்பட்டது என்கிறது ஸ்தல வரலாறு.
திருப்போருர் கோயிலின் மூலவரின் திருநாமம் ஸ்ரீகந்தசுவாமி. அற்புதத் திருமேனியராகக் காட்சி அளிக்கிறார். சிதம்பர சுவாமிகள், இந்தக் கோயிலின் நாயகனான கந்தசுவாமி குறித்து 726 பாடல்களை இயற்றியுள்ளார். சிதம்பர சுவாமிகளுக்கும் இங்கே சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
கந்தசுவாமி திருத்தலத்துக்கு வந்து, மனதார வேண்டினால், மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்கிறார்கள் பக்தர்கள். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவர் முருகப் பெருமான். எனவே இவருக்கு அபிஷேங்கள் செய்யப்படுவதில்லை.
இந்தக் கோயிலில், சம்ஹார முத்துக்குமார சுவாமியின் விக்கிரகத் திருமேனி, கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது. வலது காலை மயில் மீது ஊன்றியிருக்கிறார். வில்லேந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். சம்ஹார முத்துக்குமார சுவாமியை, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகளில் அல்லது ஆறு சஷ்டி திதிகளில் வந்து வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்வது எண்ணிலடங்காத பலன்களைத் தந்தருளும்.
முருகப்பெருமானுக்கு உரிய செவ்வரளி மலர்கள் சூட்டி வணங்கி ஆறு நெய்தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்தால், எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் பலமிழக்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறச் செய்து அருளுவார் சம்ஹார முத்துக்குமார சுவாமி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
அதேபோல், கோயிலில் விக்னங்களையெல்லாம் தீர்த்தருளும் விநாயகர் சந்நிதியும் அருகில் சனீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கிறது. சனிக்கிழமைகளில், முருகப்பெருமான், விநாயகர், சனீஸ்வரர் மற்றும் பைரவர் முதலானோரை நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கி வழிபட்டு வந்தால், சனி முதலான அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.
தைப்பூசத் திருநாளில் திருப்போரூர் கந்தசுவாமியைக் கண்ணாரத் தரிசிப்போம். எதிரிகளை பலமிழக்கச் செய்வார் முருகக் கடவுள்.