

சிறுவாபுரி முருகப் பெருமானை தொடர்ந்து வணங்கி வந்தால், விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
சென்னையில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சிறுவாபுரி திருத்தலம். இங்கே உள்ள முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி.
அழகிய ஆலயம். கொடிமரத்துக்கு அருகில் உள்ள மயில், மரகத மயிலாகக் காட்சி தருவது காண்பதற்கு அரிதான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இதேபோல் கோயிலுக்குள் நுழைந்ததும் ராஜகணபதியும் கம்பீரம் கூட்டி காட்சி தருகிறார். பிள்ளையாரும் மரகதக் கல்லில் அற்புதமாகக் காட்சி தருகிறார்.
இந்தத் தலத்தின் நவக்கிரகம் வித்தியாசமானது. நவக்கிரத்தில் உள்ள கிரகங்கள் அனைத்துமே தங்களின் வாகனத்துடன் தரிசனம் தருவது மற்றுமொரு சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், வீடு மனை வாங்க வேண்டுமே என்று கனவு காண்பவர்கள், கடன் தொல்லையால் சிக்கிக் கொண்டிருக்கிறோமே என்று வருந்துபவர்கள், சிறுவாபுரி தலத்துக்கு வந்து முருகப்பெருமானை தொடர்ந்து ஆறு வாரங்கள் தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், திருமணத் தடை விலகும். கல்யாண யோகம் கைகூடி வரும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
திருமணம் தள்ளிப்போகிறதே என வருந்துபவர்கள், சிறுவாபுரி தலத்துக்கு வந்து முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வரவேண்டும். பிரார்த்தனையின் நிறைவு நாளில், ஸ்ரீமரகத விநாயகப் பெருமான் தொடங்கி, அனைத்து தெய்வங்களுக்கு அர்ச்சித்து வணங்க வேண்டும். முருகப்பெருமான் சந்நிதியில், மாலையைப் பெற்றுக் கொண்டு, அந்த மாலையை அணிந்தபடி ஆறுமுறை பிராகார வலம் வந்து சுவாமியை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும்.
இதையடுத்து மாலையை வீட்டுக்கு எடுத்து திருமணம் நடந்தேறும் வரை தினமும் பூஜித்து வரவேண்டும். திருமணம் நடைபெற்றதும் கோயிலில் வழங்கிய மாலையை எடுத்துக் கொண்டு தம்பதி சமேதராக வந்து முருகப்பெருமானை வணங்கி, கோயிலில் அமைந்திருக்கும் மரத்தில் மாலையைக் கட்டி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சொந்த வீடு அமையவில்லையே, சொந்த வீடு அமையவேண்டுமே என கனவு இல்லம் வேண்டுவோர், ஒவ்வொரு முறை சிறுவாபுரி ஆலயத்துக்கு வரும் போதும் இரண்டு தேங்காய், இரண்டு வாழைப்பழம், இரண்டு எலுமிச்சை, ஒரு பூமாலை என எடுத்து வந்து வணங்கிப் பிரார்த்தனை செய்யவேண்டும். அப்போது பூஜையில் இருந்து ஒரு எலுமிச்சையை வழங்குவார்கள். அந்த எலுமிச்சையை பூஜையறையில் பூக்களிட்டு தினமும் வணங்கி வரவேண்டும். இரண்டாவது வாரமும் இதேபோல் எடுத்துச் சென்று வழிபட, அப்போது தரும் எலுமிச்சையை பூஜையறையில் வைத்துவிட்டு, கடந்த வாரம் வைத்திருந்த எலுமிச்சையை நீர்நிலைகளில் செலுத்திவிடவேண்டும்.
தைப்பூச நன்னாளில், சிறுவாபுரி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் விமரிசையாக நடந்தேறும். இந்த நாளில், விரதங்கள் மேற்கொண்டு ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்துப் பிரார்த்திப்பார்கள்.
இப்படியாக ஐந்து வாரங்கள் பூஜைகள் செய்து வரவேண்டும். சிறுவாபுரி முருகப் பெருமானை தொடர்ந்து வணங்கி வந்தால், விரைவில் சொந்த வீடு யோகம் கிடைக்கப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.