தைப்பூசம் ஸ்பெஷல் ; இழந்ததைத் தருவார் தணிகைவேலன்! 

தைப்பூசம் ஸ்பெஷல் ; இழந்ததைத் தருவார் தணிகைவேலன்! 
Updated on
2 min read

படைப்புக்கடவுளான பிரம்மா, இந்தத் தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார் என்றும் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றார் என்றும் சூரபத்மனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் செல்வங்களை மீண்டும் பெற்றார் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம். பிரம்மா, பூஜிப்பதற்கு உண்டுபண்ணிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. எனவே திருத்தணி முருகக் கடவுளை வணங்கினால், இழந்ததையெல்லாம் மீண்டும் பெறலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆறுபடைவீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் 60 படிகள் அமைந்துள்ளன. தமிழ் மாதங்கள் மொத்தம் அறுபது. இதைக் குறிக்கும் வகையில் அறுபது படிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஒரு வருடத்தின் நாட்கள் 365. திருத்தணி முருகப்பெருமான் கோயிலில் 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருத்தணி. ஆறுபடைவீடுகளில் ஐந்தாம்படை வீடு என்று போற்றப்படுகிறது திருத்தணி திருத்தலம். அற்புதமான திருத்தலம். மலையும் மலையின் மீது கோயிலும் என கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது திருத்தணி திருத்தலம். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் இந்தத் தலம் குறித்து சொல்லப்ப்பட்டிருக்கின்றன. முத்துசாமி தீட்சிதர் இந்தத் தலத்து முருகப்பெருமானை வணங்கிப் பாடியிருக்கிறார். அதேபோல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலங்களில் திருத்தணியும் ஒன்று.

ஒருபக்கம் சூரபத்மனை அழித்தொழித்து கோபம் தாளாமல் இருந்த முருகப்பெருமான், இன்னொரு பக்கம் ஸ்ரீவள்ளியை வேடர்களுடன் வேடராக வந்து கோபத்தையெல்லாம் துறந்து அமர்ந்த இடமே திருத்தணி என்று விவரிக்கிறது ஸ்தல புராணம். முருகன் கோபம் தணிந்த தலமாதலால், தணிகை என்றும் திருத்தணிகை என்றும் ஸ்தலத்துக்கு பெயர் அமைந்தது. முருகப்பெருமானுக்கும் தணிகைவேலன் என்று பெயர் அமைந்தது.

மேலும் அச்சத்தையும் பணியையும் தணித்த தலம், நோயைத் தணித்த தலம், காமத்தைத் தணித்த தலம், துன்பங்களையும் துக்கங்களையும் தணித்த தலம், கஷ்டங்களையும் கவலைகளையும் தணித்த தலம், வறுமையையும் வாட்டத்தையும் தணித்த தலம் என்றெல்லாம் ஒருங்கே பெற்ற சாந்நித்தியமான தலம் என்று போற்றப்படுகிறது திருத்தணி.

முருகக் கடவுளுக்கு கிரியா சக்தியாகத் திகழ்கிறார் தெய்வானை. அதேபோல், இச்சா சக்தியாகத் திகழ்கிறார் ஸ்ரீவள்ளி. ஸ்ரீதெய்வானையை திருமணம் செய்துகொண்ட திருத்தலம் திருப்பரங்குன்றம். ஸ்ரீவள்ளியை திருமணம் செய்துகொண்ட திருத்தலம் திருத்தணி.

திருத்தணி திருத்தலத்துக்கு ஒருமுறையேனும் வந்து தணிகை வேலனை தரிசித்துப் பிரார்த்தித்தால், வாழ்வில் நல்ல நல்ல திருப்பங்களையெல்லாம் ஏற்படுத்தி அருளுவார் முருகப்பெருமான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

படைப்புக்கடவுளான பிரம்மா, இந்தத் தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வணங்கினார் என்றும் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றார் என்றும் சூரபத்மனால் கவர்ந்து செல்லப்பட்ட தன் செல்வங்களை மீண்டும் பெற்றார் என்றும் விவரிக்கிறது ஸ்தல புராணம். பிரம்மா, பூஜிப்பதற்கு உண்டுபண்ணிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. எனவே திருத்தணி முருகக் கடவுளை வணங்கினால், இழந்ததையெல்லாம் மீண்டும் பெறலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

தைப்பூசத் திருவிழா திருத்தணியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திரளாக வந்து, தணிகைநாதனை, தணிகைவேலனைத் தரிசித்துச் செல்கிறார்கள்.

தணிகைவாழ் முருகனுக்கு அரோகரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in