

குமரக்கோட்டம் குமரக் கடவுளை வந்து வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காஞ்சிபுரத்தை நகரேஷு காஞ்சி என்பார்கள். நகரங்களில் சிறந்தது என்று போற்றுவார்கள். சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று சைவ தலங்களும் வைணவ தலங்களும் என ஏராளமாக ஆலயங்கள் இங்கே உள்ளன. ஏகாம்பரேஸ்வரர் கோயிலும் பிரசித்தம். வரதராஜ பெருமாள் கோயிலும் பிரமாண்டம்.
அதுமட்டுமா? எங்குமே இல்லாத வகையில் சித்திரகுப்தனுக்கு ஆலயம் இருப்பது காஞ்சி மாநகரத்தில்தான். அதேபோல் உலகின் சக்தி பீடங்களில் தலைமைப்பீடமாகத் திகழ்வதும் காஞ்சியம்பதிதான். காமாட்சி அம்பாளே சக்தி பீடங்களின் தலைவியாகத் திகழ்கிறாள்.
இத்தனை புண்ணியம் மிகுந்த திருத்தலத்தில்தான் முருகப்பெருமானுக்கும் அற்புதமான கோயில் அமைந்திருக்கிறது. இதனை குமரக்கோட்டம் என்றே குறிப்பிடுகிறது ஸ்தல புராணம்.
புராணத்தில் குமரக்கோட்டம் தலத்தை, செனாதீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தபுராணம் தோன்றிய திருத்தலம் என்றும் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என்றும் பெருமைமிக்க தலமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
‘கந்தபுராணம்’ கி.பி.11ம் நூற்றாண்டில் அரங்கேறியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அரங்கேறிய மண்டபம் இன்றைக்கும் இருக்கிறது. இங்கே மூலவர் முருகப்பெருமான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார்.
அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் முதலானோர் இந்தத் தலத்து முருகப்பெருமானைப் பாடியுள்ளனர் என காஞ்சி புராணம் விவரிக்கிறது. வைகாசி மாதத்தில் குமரக்கோட்டம் தலத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீவள்ளிதேவிக்கும் முருகப்பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழாவின் போது ஸ்ரீதெய்வானைக்கும் முருகக் கடவுளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இந்தத் தலத்தில், கார்த்திகை நட்சத்திர நாளிலும் பரணி நட்சத்திர நாளிலும் பூச நட்சத்திர நாளிலும் சஷ்டி திதியிலும் வந்து தரிசித்து பிரார்த்தனை செய்வது வேண்டிக்கொண்டால், திருமண யோகத்தைத் தந்தருளுவார் முருகப் பெருமான்.
மேலும் செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் குமரக்கோட்டம் குமரக் கடவுளை வந்து வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில். நகரங்களில் சிறந்து விளங்குகிற காஞ்சியம்பதிக்கு வந்தால், காஞ்சி வரதரையும் ஏகாம்பரேஸ்வரரையும் காமாட்சி அன்னையையும் சித்திரகுப்தரையும் குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமி முதலானோரை தரிசிக்கலாம்.
தைப்பூச நன்னாளில், குமரகோட்டம் திருத்தல நாயகனை, சுப்ரமணிய சுவாமியை வணங்குவோம்.