

ஞானமும் யோகமும் தரும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களுக்கான தடைகளையெல்லாம் நீக்கி அருளுவார் சுவாமிநாத சுவாமி. கல்யாண யோகத்தைத் தந்தருளுவார். சந்தான பாக்கியத்தை அருளுவார் என்கிறார்கள் பக்தர்கள்.
முருகக் கடவுளுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன. இந்த ஆறுபடைவீடுகளில், நான்காம் படை வீடு எனப் போற்றப்படுகிறது சுவாமிமலை திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சுவாமிமலை. இங்கே முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீசுவாமிநாத சுவாமி.
சுவாமிமலைக்கு திருவேரகம் என்றொரு பெயரும் உண்டு. ஏர் என்றால் அழகு. அகம் என்றால் இல்லம். வீடு. ‘சோழநாடு சோறுடைத்து’ என்பார்கள். ஏர்த்தொழிலான விவசாயம் செழித்து வளருகிற பூமி என்பதால், இந்தப் படைவீடு திருவேரகம் என்றே அழைக்கப்படுகிறது. மேலும் இந்தத் தலத்துக்கு, சிவகிரி, சிரகிரி, குரு அம்சமாகத் திகழும் தலம் என்பதால் குருமலை, குருகிரி, கந்தராசலம் எனப் பல பெயர்கள் உள்ளன.
முருகக் கடவுள் குருவாக, ஞானகுருவாக அருள்பாலிக்கும் தலங்களாக திருச்செந்தூர் திருத்தலத்தையும் சுவாமிமலை திருத்தலத்தையும் சொல்கிறது புராணம். ஆறுபடைவீடுகள் என்பது ஆறு ஆதார மையங்களைக் குறிக்கின்றன என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மதுரை திருப்பரங்குன்றம் - மூலாதாரத்தைக் குறிக்கும். திருச்செந்தூர் திருத்தலம் சுவாதிஷ்டானத்தைக் குறிக்கிறது. பழநி திருத்தலம் மணிபூரகத்தைக் குறிக்கும். திருத்தணி திருத்தலம் விசுத்தியைக் குறிக்கிறது. பழமுதிர்ச்சோலை திருத்தலம் ஆக்ஞையைக் குறிக்கிறது. சுவாமிமலை திருத்தலம் அனாகதத்தைக் குறிக்கிறது என்பார்கள்.
சோழ தேசத்தில், மலைகளே இல்லை. ஆனாலும் சுவாமிமலை திருத்தலம் செயற்கையான குன்றில், கட்டுமலையாக கோயில் கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியம்தான். அழகு மலையில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.
சோழதேசத்தையே ஒரு கோயிலாக பாவித்து வணங்குவதாக சொல்லுவார்கள். அந்த வகையில் கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி கோயில் விநாயகர் சந்நிதியாகவும் அருகில் உள்ள சுவாமிமலை கோயில் முருகப்பெருமான் சந்நிதியாகவும் வணங்கப்படுகிறது.
திருவலஞ்சுழி விநாயகர் தலம். சுவாமிமலை முருகப் பெருமான் தலம். சண்டேசர் தலமாக திருசேய்ஞலூர் தலமும் சீர்காழி சட்டநாதர் தலமாகவும் சிதம்பரம் நடராஜ பெருமான் திருத்தலமாகவும் திருவாவடுதுறை நந்திதேவர் திருத்தலமாகவும் சூரியனார் கோவில் நவக்கிரகத் திருத்தலமாகவும் ஆலங்குடி திருத்தலமாகவும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.
அப்பன் சிவனுக்கு பாடம் நடத்திய மைந்தன் முருகப்பெருமான் குடிகொண்டது இந்த சுவாமிமலையில்தான். பிரம்மாவுக்கு பிரணவத்தின் பொருளுரைத்த திருத்தலம் எனும் பெருமையைக் கொண்டது சுவாமிமலை திருத்தலம்தான்.
இங்கே, தைப்பூசத் திருநாளில், முருகப்பெருமானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். தைப்பூச நன்னாளில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் விசேஷ அலங்காரங்களும் நடைபெறும்.
ஞானமும் யோகமும் தரும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களுக்கான தடைகளையெல்லாம் நீக்கி அருளுவார் சுவாமிநாத சுவாமி. கல்யாண யோகத்தைத் தந்தருளுவார். சந்தான பாக்கியத்தை அருளுவார் என்கிறார்கள் பக்தர்கள்.