

திருவெண்காடு எனும் புதன் பரிகாரத் தலத்துக்கு வந்து தரிசியுங்கள். புத்தியில் தெளிவையும் ஞானத்தையும் தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை தரிசியுங்கள். தீபமேற்றி வழிபடுங்கள்.
சீர்காழிக்கு அருகில் உள்ளது திருவெண்காடு திருத்தலம். இங்கே உள்ள சுவாமியின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை. நவக்கிரகத் திருத்தலங்களில் இந்தத் தலம் புதன் பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது.இங்கே புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.
புதன் பரிகாரத் திருத்தலம் என்று போற்றப்படுகிற திருவெண்காடு மிகச் சிறிய கிராமம். ஆனால் ஆலயமோ மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது. கோயிலும் அழகு. கோயிலைச் சுற்றி வெளியே உள்ள தேரோட்ட வீதிகளும் கொள்ளை அழகு.
கிழக்கு நோக்கிய கோபுரம். ஐந்து நிலை ராஜகோபுரம். மேற்குப் பகுதியில் இன்னொரு கோபுரமும் வாசலும் இருக்கின்றன. சுமார் 792 அடி நீளம் கொண்ட ஆலயம். வடக்கும் தெற்குமாக சுமார் 310 அடி அகலமும் கொண்டு பிரமாண்டமாகத் திகழ்கிறது திருக்கோயில்.
கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்து உள்ளே சென்றால், கொடிமரத்துப் பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது. இந்த இடத்துக்குத் தெற்கே அக்கினி தீர்த்தமும் அக்னீஸ்வரர் சந்நிதியும் அமைந்திருக்கின்றன. அக்கினி தீர்த்தக்கரையில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. மெய்கண்டார் சந்நிதி அமைந்திருக்கிறது.
தெற்குப் பிராகாரத்தில் சூரியனையும் சூரிய தீர்த்தக் குளத்தையும் தரிசிக்கலாம். இங்கே இந்தத் தலத்தில் உள்ள ஆறுமுகப் பெருமான் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். வெளிப்பிராகாரத்தில், வடமேற்கு மூலையில் ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சந்நிதி கொண்டிருக்கிறாள்.
சக்திவாய்ந்த தெய்வமாக, கருணையே வடிவான அன்னையாக திருக்காட்சி தருகிறாள் ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை. சிவனாரையும் புதன் பகவானையும் அகோர சிவத்தையும் வணங்கி வழிபடுகிற அதேவேளையில், ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகையைத் தரிசித்துப் பிரார்த்தனைகள் மேற்கொண்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம். கலைகளில் சிறந்து விளங்கலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள்.
நிருத்த மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம் என மிகப் பிரமாண்டமான ஆலயமாகத் திகழும் திருவெண்காடு திருத்தலம், பரிகாரத் தலமாகவும் நவக்கிரக திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
திருவெண்காடு எனும் புதன் பரிகாரத் தலத்துக்கு வந்து தரிசியுங்கள். புத்தியில் தெளிவையும் ஞானத்தையும் தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள புதன் பகவானை தரிசியுங்கள். நெய்தீபமேற்றி வழிபடுங்கள். வளமும் நலமும் தந்தருளுவார் புதன் பகவான்!