Last Updated : 26 Jan, 2021 06:38 PM

 

Published : 26 Jan 2021 06:38 PM
Last Updated : 26 Jan 2021 06:38 PM

தைப்பூசம் ஸ்பெஷல் ; அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை!

வள்ளலார் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில்தான். அதனால்தான் வடலூரில் அமைந்துள்ள தலத்தில், வருடந்தோறும் தைப்பூசத் திருநாளின் போது, சிறப்பு பூஜைகளும் ஜோதி தரிசன வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது.

தீபத்தையே தெய்வமாகப் பார்க்கிறது சாஸ்திரம். தீப வழிபாடு என்பது நம் பூஜைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தீபத்தில் இறைவன் குடிகொண்டிருக்கிறான் என்றும் இறைசக்தி வியாபித்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அத்தனை பெருமையும் கீர்த்தியும் பெற்ற தீபத்துடன், ஜோதியுடன் ஐக்கியமானவர்... ராமலிங்க அடிகளார்.

வடலூர் பெருமான் என்றும் வடலூர் ராமலிங்க அடிகளார் என்றும் வள்ளல் பெருமான் என்றும் போற்றப்படுகிறார் ராமலிங்க சுவாமிகள்.

இந்த அகண்ட உலகில் மிகப்பெரிய நோயாக, தீராப் பிரச்சினையாக, பிணியாக இருப்பதே பசி. எல்லோர்க்கும் உணவு, எல்லா உயிரினங்களும் பசியாற வேண்டும் என்பதையே லட்சியமாக, குறிக்கோளாக, பிரார்த்தனையாகக் கொண்டவர் வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார்.

வள்ளல் ராமலிங்க அடிகளார் அருளிய ஜீவகாருண்யம் மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தியது. இவரின் சமரச சன்மார்க்க நெறிமுறைகளும் அஹிம்சையும் மிகப்பெரிய ஆன்மிகச் சிந்தனையை நமக்குள் ஏற்படுத்தின.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என அருளிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார், ’அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்று அருளையும் ஜோதியையும் கருணையையும் நமக்குப் போதித்தார். தான் ஏற்றிய ஜோதியிலேயே, இறை சொரூபமாகத் திகழும் ஒளியிலேயே ஐக்கியமானார் ராமலிங்க சுவாமிகள் என்கிறது வள்ளலார் பெருமானின் சரிதம்.

வள்ளல் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில்தான். அதனால்தான் வடலூரில் அமைந்துள்ள தலத்தில், வருடந்தோறும் தைப்பூசத் திருநாளின் போது, சிறப்பு பூஜைகளும் ஜோதி தரிசன வழிபாடும் விமரிசையாக நடைபெறுகிறது.

வருகிற 28ம் தேதி வியாழக்கிழமை தைப்பூசத் திருநாள். இந்த நன்னாளில், வள்ளலார் பெருமானை மனதார வழிபடுவோம். தீபத்தில் இரண்டறக்கலந்த ஒப்பற்ற அருளாளரைப் போற்றிப் பிரார்த்திப்போம். வழிபடுவோம். பசிப்பிணி போக்கி அருளுவார். வறுமை நிலையில் இருந்து நம்மை மீளச் செய்வார்.

நோயற்ற வாழ்வைத் தந்து மலரச் செய்வார் ராமலிங்க சுவாமிகள். தைப்பூசத் திருநாளில் ஜோதியில் அருட்ஜோதியெனக் கலந்த மகானைப் போற்றுவோம். வணங்குவோம்.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x