தைப்பூசம் ஸ்பெஷல் ; வேலுக்கு பூஜை; வேலவனுக்கு ஆராதனை! 

தைப்பூசம் ஸ்பெஷல் ; வேலுக்கு பூஜை; வேலவனுக்கு ஆராதனை! 
Updated on
1 min read

தைப்பூசத் திருநாளில், வேல் பூஜை செய்வதும் வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும் வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் பக்தர்கள்.

தை மாதம் என்பது உத்தராயன புண்ய காலத்தின் தொடக்க மாதம். தைத் திருநாள் என்று சொல்லப்படும் மகர சங்கராந்தி நன்னாளில் இருந்து தட்சிணாயன புண்ய காலம் தொடங்குகிறது. இந்த சமயத்தில் வருகிற தை மாதக் கிருத்திகை விசேஷமானது.அதேபோல், தட்சிணாயன புண்ய காலத் தொடக்கம் என்பது ஆடி மாதத்தில் அமைந்திருக்கிறது. அதனால்தான் ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகையும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. வழிபடப்படுகிறது.

அதேபோல், கிருத்திகை நட்சத்திரம் என்றில்லாமல் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரமும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் விரத நாளாக, முருகப்பெருமானை வணங்குவதற்கு உரிய விசேஷ தினமாக வழிபடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமும் மகத்துவம் வாய்ந்தது.

அந்தவகையில், தை மாதத்தில் வருகிற பூசம், தைப்பூசத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஆறுமுகப்பெருமான், ஒருமுகமாகத் தோன்றிய திருநாளே தைப்பூச நன்னாள் என்று கொண்டாப்படுகிறது.

இந்தநாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வதும் இல்லத்தில் முருகப்பெருமானுக்கு பூஜைகள் மேற்கொள்வதும் அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதும் தோஷங்களையெல்லாம் போக்கக்கூடியது. குறிப்பாக, செவ்வாய் தோஷத்தைப் போக்கி அருளும். சந்தோஷத்தைப் பெருக்கித் தரும் என்கிறார்கள் முருக பக்தர்கள்.

தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடலாம். முக்கியமாக, முருகப்பெருமானின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வேலுக்கு அபிஷேகங்கள் செய்வது நற்பலன்களைக் கொடுக்கக்கூடியது.

திருப்பரங்குன்றம் முதலான தலங்களில் வேல் அபிஷேகம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். வேல் பூஜை செய்வதும் வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும் வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் பக்தர்கள்.

தைப்பூச நன்னாளில், முருகக் கடவுளுக்கு கந்தஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாராயணம் செய்வதும் எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கித் தரும். எதிரிகளை பலமிழக்கச் செய்யும். இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளுவார் வெற்றிவடிவேலவன்.

ஸ்கந்தகுரு கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்குவோம். வீட்டில் சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேலவனை, திருக்குமரனை மனதாரப் பிரார்த்திப்போம்.

வருகிற 28ம் தேதி வியாழக்கிழமை தைப்பூசத் திருநாள். கந்தகுமாரனை வணங்குவோம். வள்ளிமணாளனைப் போற்றுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in