

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா… வீரவேல் முருகனுக்கு அரோகரா…’ எனும் முழக்கங்களோடு சிறிய ஊர்வலமொன்று திருவான்மியூர் வடக்கு மாடவீதியிலிருந்து கிளம்பியது. சென்ற அக்டோபர் 27-ம் தேதி மாலையில், ‘ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சென்னை 200 பிளஸ் சார்பாக ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிக்கு ஒரு நடைபயணம்’ என்கிற பதாகையைப் பிடித்தபடி அவர்கள் சென்றனர். திருவான்மியூரில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாசர் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில்தான், பாம்பன் சுவாமிகளின் சமாதியும் அமைந்துள்ளது.
கைகளில் தீபத்தையும் ஊதுவத்தியையும் ஏந்தியபடி மெல்ல ஆலயத்தை வலம்வரும் பக்தர்கள். ஸ்ரீபாம்பன் சுவாமிகள், சமாதியின் எதிரே மனமுருகியபடி கண்மூடிப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பெரும் வெட்டவெளி, ஆலயத்தைச் சுற்றிலும் மரங்களென ஏகாந்தமாய் காட்சியளிக்கிறது. சரியாய் ஆலயத்திற்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்திலேயே மனம் இளைப்பாறத் தொடங்குகிறது.
தமிழக அரசின் ஆலய அன்னதான திட்டத்தின்கீழ் தினமும் 500 பேருக்கு அன்னதானமும் இங்கு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஆலயத்திற்கு வழிபட வரும் பக்தர்களும் பெரிய பாத்திரங்களில் கொண்டுவந்த உணவைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறார்கள். எந்த தள்ளுமுள்ளுமில்லாமல் அமைதியாய் வரிசையாய் நின்று பிரசாதத்தை வாங்கிப்போவார்கள் பக்தர்கள்.