கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவாள் காஞ்சி காமாட்சி! 

கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவாள் காஞ்சி காமாட்சி! 
Updated on
1 min read

தை மாத செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் சொல்லி காமாட்சித் தாயை வணங்கி வழிபடுவது மும்மடங்குப் பலன்களைத் தரும் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் ஏராளம். இவற்றில் சக்தீ பீடங்கள் என்று அழைக்கப்படும் ஆலயங்களும் உள்ளன. இத்தனை சக்தி பீடங்களும் தலைமை பீடமாக அமைந்திருக்கிறது காஞ்சி மாநகரம்.

காஞ்சி மாநாகரில் கோயில் கொண்டிருக்கிறாள் காமாட்சி அம்பாள். சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவியாகத் திகழ்கிறாள் அம்பாள்.

மனதில் இனம் புரியாமல் குழம்பித் தவிக்கும் தருணங்களில், காமாட்சி அம்பாளை மனதார நினைத்துக் கொண்டு வேண்டினாலே போதும்... ஓடோடி வருவாள், வந்து நம் துயரங்களையெல்லாம் துடைத்து அகற்றுவாள் என்கிறாள் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

மனசஞ்சலம், வாழ்வில் தொடர்ந்து தடைகள், மங்கல காரியங்களை நடத்த முடியாத நிலை, பொருளாதாரச் சிக்கல், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாத சூழல் என்று தவித்து மருகிக் கொண்டிருப்பவர்கள், காஞ்சி அன்னையை மனதார வேண்டினால் போதும். மூக பஞ்ச சதியில் உள்ள காமாட்சி அன்னையின் ஸ்லோகத்தைச் சொல்லிப் பிரார்த்தனை செய்தால் போதும்... சகல குறைகளையும் போக்கி அருளுவாள். சகல சம்பத்துகளையும் தந்தருளுவாள் அன்னை!

துர்விஷயங்கள், கடன் தொல்லைகள், குடும்பத்தில் சஞ்சலங்கள், மனதில் தேவையில்லாமல் தோன்றும் பயம் முதலான தருணங்களில், வீட்டில் விளக்கேற்றி காமாட்சி அம்பாளை ஆத்மார்த்தமாக நினைத்து ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள்.

பூரண நலம் தந்து காப்பாள். நம் எதிர்ப்புகளையெல்லாம் இல்லாமல் செய்து அருளுவாள் காஞ்சி காமாட்சி.

ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

எங்களின் சக்திபீட நாயகி காமாக்ஷி அன்னையே... உன்னை வணங்கும் அடியவர்களுக்கு உன்னுடைய கருணையால் தனம், வித்தை, எல்லையில்லாத கீர்த்தி, நல்ல வாரிசு, மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை, ஆரோக்கியம், ஆயுள் ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாகத் தருகிறது என்று பொருள்.

திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே... பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களை வணங்குகிறோம். பரோபகாரியான எங்களின் அன்னையே எங்களுக்கு எல்லாமும் கொடுப்பவர் உன்னை விட்டால் எவர் இருக்கிறார்கள்? என்று அர்த்தம்.

செவ்வாய், வெள்ளியில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுவது மிகுந்த நன்மைகளைத் தரும்.

தை மாத செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் சொல்லி காமாட்சித் தாயை வணங்கி வழிபடுவது மும்மடங்குப் பலன்களைத் தரும் என்கிறார் காஞ்சி காமாட்சி கோயிலின் நடராஜ சாஸ்திரிகள்.

கவலைகளையெல்லாம் தீர்க்கும் காமாட்சி அன்னையை வேண்டுவோம். நம் கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவாள் காமாட்சி அம்பாள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in