Last Updated : 25 Jan, 2021 09:52 PM

 

Published : 25 Jan 2021 09:52 PM
Last Updated : 25 Jan 2021 09:52 PM

தை பிரதோஷம்.. நந்திதேவருக்கு அருகம்புல் மாலை


தை மாத பிரதோஷ நன்னாளில், அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் சிவலிங்கத் திருமேனிக்கு நடைபெறும் அபிஷேகத்தையும் கண் குளிரத் தரிசிப்போம். கவலைகளையும் துக்கத்தையும் போக்கி அருளுவார் சிவனார்.

நற்றுணையாவது நமசிவாயம் என்பார்கள். நமசிவாயம் எனும் ஐந்தெழுத்து மந்திரம் வலிமை மிக்கது. இந்த இப்பிறவியைக் கடைத்தேற்ற உதவுவது. முக்தியை தரவல்லது என்றெல்லாம் போற்றுகிறார்கள் சிவபக்தர்கள்.

மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாளும் சிவராத்திரி நாளும் சிவபெருமானுக்கு மிக முக்கியமான தினங்களாகப் போற்றப்படுகின்றன. வழிபடப்படுகின்றன. அதேபோல், திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். திங்கட்கிழமையன்று, திங்கள் எனப்படுகிற சந்திரனைச் சூடிய சிவபெருமானுக்கு உரிய, சிவனாரை தரிசிக்கக் கூடிய அற்புதமான நாளாக வழிபட்டு வருகிறார்கள் சிவனடியார்கள்.

சிவ வழிபாட்டில் மிக முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது பிரதோஷம். அற்புதமான பிரதோஷ நன்னாளில், சிவன் கோயிலுக்குச் செல்வதும் நந்திதேவரையும் சிவலிங்கத் திருமேனியையும் தரிசிப்பதும் புண்ணியத்தைத் தந்தருளும் என்று போற்றுகிறார்கள் சிவாச்சார்யப் பெருமக்கள்.

பிரதோஷ தரிசனம், நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கவல்லது. முற்பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் போக்கவல்லது. ஒவ்வொரு கிழமையில் வருகிற பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. எண்ணற்ற பலன்களைத் தரக்கூடியவை.

செவ்வாய்கிழமையை மங்கல வாரம் என்பார்கள். செவ்வாய்க்கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் போது அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் வாழ்வில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும் என்பார்கள். பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறலாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தின் இன்னொரு சிறப்பம்சம்... செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. இந்த நாளில், ராகுகாலவேளையில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம். ராகுகால பூஜையில் துர்கைக்கு விளக்கேற்றி வழிபட்டுவிட்டு, அப்படியே நந்திதேவருக்கும் சிவபெருமானுக்கும் நடைபெறும் பிரதோஷ அபிஷேக ஆராதனைகளையும் கண் குளிர தரிசிப்பது, வாழ்வில் இதுவரை இருந்த துக்கங்களையெல்லாம் போக்கும். கஷ்டங்களையெல்லாம் நிவர்த்தி செய்யும் என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.

தை பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்வோம். சிவ தரிசனம் செய்வோம். சிவனருளைப் பெறுவோம். நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்குவோம். சிவனாருக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்வோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x