தை செவ்வாயில் அழகன் முருகனை தரிசிப்போம்

தை செவ்வாயில் அழகன் முருகனை தரிசிப்போம்
Updated on
1 min read


தை செவ்வாய்க்கிழமையில் அழகன் முருகப்பெருமானை தரிசிப்போம். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேலவனை வேண்டுவோம். செவ்வாய் முதலான தோஷத்தைப் போக்கி அருளுவார் முருகக் கடவுள். வீடு மனை யோகத்தைத் தந்தருளுவார். வேதனைகளையும் சோதனைகளையும் போக்கி அருளுவார்.

முருக வழிபாட்டை கெளமாரம் என்பார்கள். முருகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாக செவ்வாய்க்கிழமையைச் சொல்லுவார்கள். செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள்.

முருகு என்றால் அழகு என்று அர்த்தம். அழகன் முருகனுக்கு ஆறுபடை வீடுகள் உள்ளன. ஆறுபடை வீடுகளைக் கடந்தும் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. சிவாலயங்களில், முருகப்பெருமானுக்கு தனிச்சந்நிதியே இருக்கின்றன.

சிவாலயமாக இருந்தபோதும் முருகப்பெருமான் அங்கே தனி சாந்நித்தியத்துடன் திகழும் கோயில்கள் ஏராளமாக அமைந்திருக்கின்றன. ஆறுபடை வீடுகளைக் கடந்த கோயில்கள் போல் கந்தகோட்டம், குமரக்கோட்டம் என்றெல்லாம் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் இருக்கின்றன.

முருகப்பெருமானின் வழிபாடுகளும் ஏராளம். முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள். அதேபோல், திருப்பரங்குன்றம் முதலான ஆலயங்களில் வேலுக்கு அபிஷேகம் செய்வது ரொம்பவே விசேஷம். ஒட்டன் சத்திரத்தில் இருந்து பழநி செல்லும் வழியில், அடையாள வேல் என்றொரு இடமே உள்ளது. இங்கே உள்ள வேலுக்கு சிறப்புப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

மாதந்தோறும் வருகிற சஷ்டி திதி கந்தபெருமானுக்கு உரிய நாளாக வழிபடப்படுகிறது. அதேபோல், மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷம். தை மாதத்தில் வருகிற கிருத்திகையும் ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகையும் மிக முக்கியமான விரத நாளாகப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

பங்குனி உத்திரம், வைகாசி உத்திரம் முதலான நாட்களும் வேலவனுக்கு உரிய நாட்கள். வாரத்தில் செவ்வாய்க்கிழமை என்பது வள்ளிமணாளனை வணங்குவார்கள் பக்தர்கள். குறிப்பாக தை செவ்வாய்க்கிழமைகளில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து சிவகுமாரனை வணங்கி பிரார்த்தனை செய்வார்கள் பக்தர்கள்.

தை மாத 2வது செவ்வாய்க்கிழமை. இந்தநாளில், முருகப் பெருமானை தரிசிப்போம். காலையும் மாலையும் விளக்கேற்றுவோம். முருகக் கடவுளுக்கு உகந்த செந்நிற மலர்கள் சூட்டுவோம். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று கந்தகுமாரனை தரிசிப்போம். பிரார்த்திப்போம்.

செவ்வாய் முதலான தோஷத்தைப் போக்கி அருளுவார் முருகக் கடவுள். வீடு மனை யோகத்தைத் தந்தருளுவார். வேதனைகளையும் சோதனைகளையும் போக்கி அருளுவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in