

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே முப்பைத்தங்குடியில் உள்ள கைலாசநாதசுவாமி கோயில் குடமுழுக்கு இன்று (ஜன.25) விமரிசையான முறையில் நடைபெற்றது.
முப்பைத்தங்குடியில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் உடனுறை கைலாசநாத சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட இக்கோயில் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், பல்வேறு புதிய சன்னிதிகளுடன் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டது.
அதன்படி அரசு நிதி மற்றும் நன்கொடை மூலம் ரூ.1 கோடி மதிப்பில் கைலாசநாதர், காமாட்சி அம்பாள், விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியர், லட்சுமி நாராயணர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, நந்திகேஸ்வரா், பைரவர் உள்ளிட்ட பரிவார சன்னிதிகளுடன் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன.
குடமுழுக்கையொட்டி 23-ம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜை தொடங்கியது. இன்று (ஜன.25) காலையுடன் 4 கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 9.50 மணியளவில் குடமுழுக்கு நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. யாக பூஜைகளை ராஜாசுவாமி நாத சிவாச்சார்யார் நடத்தினார்.
விழாவில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் தருமபுரம் ஆதீனக் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் தனி அதிகாரி ஜெ.கருணாநிதி, திருப்பணிக் குழுவினர், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.