Last Updated : 24 Jan, 2021 12:02 PM

 

Published : 24 Jan 2021 12:02 PM
Last Updated : 24 Jan 2021 12:02 PM

ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம்; ஏற்றமும் மாற்றமும் தருவார் ஏழுமலையான்! 

விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்கவிட்டுக் கேட்போம். நம் துக்கத்தையெல்லாம் போக்கித் தந்தருளுவார் திருவேங்கடத்தான். நம்முடைய பிரச்சினைகளையெல்லாம் நீக்கித் தருவார் பிரசன்ன வேங்கடாசலபதி. ஏற்றமும் மாற்றமும் தந்தருளுவார் ஏழுமலையான்.

ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். திருமாலின் பேரருளைப் பெறுவோம். சகல சுபகாரியங்களையும் நடத்தித் தந்தருள்வார் பெருமாள்.
மகாவிஷ்ணு வழிபாடு எப்போதுமே, எல்லா காலத்திலுமே மகத்துவம் வாய்ந்தது. 108 திருப்பதிகள், 108 திவ்விய தேசங்கள் என்றும் வைஷ்ணவ ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஆழ்வார்களால், மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்களாக அவை அமைந்திருக்கின்றன.

திவ்விய தேசங்களாக இல்லாமல், அதேசமயம் மனதுக்கு திவ்வியமான தரிசனமாக, அற்புதமான திருமேனியுடன் பெருமாள் சேவை சாதிக்கின்ற தலங்கள் எத்தனையெத்தனையோ இருக்கின்றன.

ஆலய வழிபாடு என்பதே மகோன்னதமானது. அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசிப்பதும் துளசி தீர்த்தப் பிரசாதத்தைப் பெறுவதும் நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களையும் ஏற்றங்களையும் கொடுக்கவல்லவை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பெருமாளுக்கு உகந்த கிழமைகளாக புதன் கிழமையையும் சனிக்கிழமையையும் சொல்லுவார்கள். இந்தநாட்களில், பெருமாள் வழிபாடுகள் மேற்கொண்டால், சத்விஷயங்கள் அனைத்தும் கைகூடும். கல்யாண யோகத்தைத் தந்தருளுவார் பெருமாள்.

மகாவிஷ்ணுவின் அருளும் மகாலக்ஷ்மியின் அருளும் கிடைக்கப் பெறலாம். தொடர்ந்து பெருமாளுக்கு உரிய தினங்களில் ஆலயம் செல்வதும் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபடுவதும் இல்லத்திலும் உள்ளத்திலும் நற்சிந்தனைகளை வளர்க்கும். சுபிட்சத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

முக்கியமாக, பெருமாளுக்கு உகந்த திதிகளில் ஏகாதசியும் ஒன்று. ஏகாதசி நாளில், விரதம் இருந்தும் பெருமாளை ஆராதனை செய்யலாம். பூஜைகள் மேற்கொள்ளலாம். வழிபடலாம். வணங்கலாம். விரதம் இருக்க இயலாதவர்களும் பெருமாளை நினைத்தபடி பூஜைகள் மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

இன்று 24ம் தேதி ஏகாதசி. இந்த நன்னாளில், பெருமாள் படத்துக்கு துளசி மாலை சார்த்துங்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசிப்போம். ஏழுமலையானை மனதார நினைத்து பிரார்த்தனை செய்வோம்.

இந்தநாளில், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஒலிக்கவிட்டுக் கேட்போம். நம் துக்கத்தையெல்லாம் போக்கித் தந்தருளுவார் திருவேங்கடத்தான். நம்முடைய பிரச்சினைகளையெல்லாம் நீக்கித் தருவார் பிரசன்ன வேங்கடாசலபதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x