ஆராவமுதா... ஆராவமுதா..! 

ஆராவமுதா... ஆராவமுதா..! 
Updated on
2 min read

ஆராவமுதனைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். அவரின் அழகில் சொக்கிப் போவோம். சாரங்கபாணியின் சந்நிதியில் நின்று வேண்டிக்கொண்டாலே, நம் கவலைகளும் துக்கங்களும் சடுதியில் கரைந்து காணாமல் போகும் என்கிறார்கள் பக்தர்கள்.

கோயில் நகரம் எனும் பெருமைக்கு உரியது கும்பகோணம். சைவக் கோயில்களும் ஏராளம். வைணவக் கோயில்களும் தாராளம். இங்கே உள்ள ஆலயங்களில், மிகப்பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயன காலம். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயன காலம். இதைக் குறிப்பிடும் வகையில் பெருமாளை தரிசிக்க இரண்டு வாசல்கள் இருக்கின்றன.

பெருமாளின் திருநாமம் ஸ்ரீசாரங்கபாணி. ஆராவமுதன் என்ற திருநாமமும் உண்டு. மூலவர் சாரங்கபாணி, உத்தான சயனத்தில், கிடந்த கோலத்தில் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். அதனால்தான், இங்கே உள்ள பெருமாளுக்கு உத்தான சாயி என்ற பெயரும் உண்டு.

ஆடி மாதத்தில் ஜேஷ்டாபிஷேக ஏகாதசி விழா நடைபெறும். அப்போது மூலவருக்கு எண்ணெய்க்காப்பு சார்த்தப்படுவது வழக்கம். இதை 45 நாட்கள் வரை களைவதில்லை. அந்த சமயத்தில் உத்ஸவருக்கு வீதியுலாவும் இருப்பதில்லை. தீபாவளித் திருநாளின் போது வருடந்தோறும் மூலவருக்கு புனுகு சாத்துப்படி நடைபெறுகிறது.

கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி பெருமாள் கோயிலுக்கு திருமழிசை ஆழ்வார் வந்து தரிசித்து வழிபட்டார். அப்போது பெருமாள் சயனத்தில், தூங்கிய நிலையில் இருந்தாராம். இதைப் பார்த்துவிட்டு பதறிப் போனார் திருமழிசை ஆழ்வார்.

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்தமெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்த காவிரிக் கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

என்று பாடினார்.

இதனால்தான் திருமழிசை ஆழ்வாருக்கு பதில் கூறும் விதமாகக் கிடந்த கோலத்தில் இருந்தபடியே எழுந்த கோலத்தில் காட்சி தருகிறார். இதைத்தான் உத்தான சயனம் எனப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்னொரு சிறப்பும் உண்டு.

தொண்டை தேசத்தில் பிறந்தவர் திருமழிசை ஆழ்வார். அவர் நெடுங்காலம் தங்கி, தவமும் பூஜையும் மேற்கொண்ட தலம் கும்பகோணம். அதனால் குடந்தை நகருக்கு, திருமழிசைப் பிரான் உகந்த இடம் என்று போற்றுகிறார்கள் வைணவர்கள். இங்கே தங்கி வாழ்ந்த திருமழிசை ஆழ்வார், திருமாலின் திருவடியில் சேர்ந்த இடமானது, சாரங்கபாணி கோயிலுக்கு மேற்கே அரை கி.மீ. தொலைவில் உள்ள ஆரிய வைஸியர் வீதியில் உள்ளது என்கிறது ஸ்தல புராணம்.

கும்பகோணத்தில் இன்றைக்கும் சாரங்கபாணி கோயில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சாரங்கபாணியின் மற்றொரு பெயரான ‘ஆராவமுதன்’ என்று அழைத்தவர் நம்மாழ்வார். ‘உண்டாலும் தெவிட்டாத அமுதுக்கு ஆரா அமுது’ என்று பெயர்க்காரணம் சொல்கிறது புராணம்.

ஆராவமுதனைக் காண கண் கோடி வேண்டும் என்பார்கள். அவரின் அழகில் சொக்கிப் போவோம். சாரங்கபாணியின் சந்நிதியில் நின்று வேண்டிக்கொண்டாலே, நம் கவலைகளும் துக்கங்களும் சடுதியில் கரைந்து காணாமல் போகும் என்கிறார்கள் பக்தர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in