

அமாவாசையில் சக்தியை வழிபடுவதே புண்ணியம். அதிலும் உக்கிர தேவதையாகத் திகழும் பிரத்தியங்கிரா தேவியை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கும்பகோணம் அருகில் உள்ளது திருநாகேஸ்வரம். பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரத்துக்கு அருகில் அமைந்திருக்கும் ஒப்பற்ற திருத்தலம் அய்யாவாடி. இந்தத் தலத்தில்தான் அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறாள் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி.
இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஅகத்தீஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீதர்மசம்வர்த்தினி என்கிற பிரத்தியங்கிராதேவி. இந்தத் தலத்தில் பஞ்சபாண்டவர்கள் கடும் தவமிருந்து வழிபட்டு வெற்றி பெற்ற திருத்தலம்.
பூஜைக்கு அந்த வனத்தில் பூக்களில்லை. தேடித்தேடி மனம் வருந்தினார்கள். பிறகு பாண்டவர்கள் ஐந்துபேரும் அங்கே இருந்த ஆலமரத்தின் இலைகளையே பூக்களாக பாவித்து அர்ச்சித்து வழிபட்டார்கள்.வரம் பெற்றார்கள். இழந்த தேசத்தையும் ராஜாங்கத்தையும் கெளரவத்தையும் அந்தஸ்தையும் பெற்றார்கள் என்கிறது ஸ்தல புராணம்.
இங்கே உள்ள பிரத்தியங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவள். சுயம்பு மூர்த்தமாகத் தோன்றியவள். அமாவாசை நாளில் பிரத்தியங்கிரா தேவியை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர். மாதந்தோறும் அமாவாசை தினத்தின் போது சிறப்பு ஹோமங்களும் நடைபெறுகின்றன.
இந்த யாகத்தை நிகும்பலா யாகம் என்பார்கள். மிக சக்தி வாய்ந்த ஹோமம் இது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பிரத்தியங்கிரா தேவியை மனதார வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகளும் விலகும். எதிரிகளும் வலுவிழப்பார்கள். எடுத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தந்தருளுவாள் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி.
அமாவாசையில் சக்தியை வழிபடுவதே புண்ணியம். அதிலும் உக்கிர தேவதையாகத் திகழும் பிரத்தியங்கிரா தேவியை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் வாழ்வில் ஏற்றத்தையும் மாற்றத்தையும் கொடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
பிரத்தியங்கிரா தேவி காயத்ரி மந்திரம் ;
ஓம் அபராஜிதாய விதமஹே
பிரத்தியங்கிராய தீமஹி
தந்நோ உக்ர ப்ரசோதயாத்
இந்த பிரத்தியங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வழிபட்டு வந்தாலே நம் மனக்குறைகள் அனைத்தும் போக்கித் தருவாள் தேவி என்கின்றனர் பக்தர்கள்.