

தை வெள்ளிக்கிழமையில் வெக்காளி அம்மனை தரிசிப்போம். இருளில் இருந்து வெளிச்சத்துக்கு நம் வாழ்க்கையைக் கொண்டு வந்து சேர்ப்பாள் வெக்காளி அன்னை.
சக்தி வழிபாட்டில் முக்கியமான தெய்வங்கள், தங்களின் சாந்நித்தியத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. தன் அருளால் உலகையும் உலகத்து மக்களையும் உய்வித்துக் கொண்டே இருக்கின்றன. அப்படியான சக்தியரில், வெக்காளியம்மனும் உண்டு.
திருச்சி உறையூரில் கோயில் கொண்டிருக்கிறாள் வெக்காளியம்மன். மேற்கூரை இல்லாமல், சந்நிதி கொண்டிருக்கும் வெக்காளியம்மனின் சாந்நித்தியம் உலகம் முழுக்க பரவியிருக்கிறது. செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெக்காளித்தாயைத் தேடி எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் ஓடிவந்து தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
தீயசக்திக்கு உக்கிரமாகவும் நல்லோருக்கு கருணைக்கடலாகவும் திகழ்கிறாள் வெக்காளியம்மன். பொன்னையும் பொருளையும் இழந்து தவிப்பவர்கள், தொழிலில் நஷ்டமாகி மருகுபவர்கள், மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பி வருந்துபவர்கள், மகளுக்கு இன்னும் நல்ல வரன் கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்கள் என பலரும் இங்கே உறையூரில் குடிகொண்டிருக்கும் வெக்காளி அம்மனுக்கு வேண்டிக்கொள்கின்றனர்.
இங்கே வெக்காளியம்மன் சந்நிதிக்கு எதிரில் பிரார்த்தனைச் சீட்டு கட்டுகிற வழக்கம் உண்டு. தங்களின் பிரார்த்தனைகளை வெக்காளியம்மன் சந்நிதிக்கு எதிரில் சூலத்தில் கட்டிக்கொண்டு மனமுருக வேண்டிக்கொள்கின்றனர். இந்த பிரார்த்தனைகளை நள்ளிரவில் பூஜையெல்லாம் முடிந்து நடை சார்த்திய பிறகு, வெக்காளித்தாயே பார்த்து ஒவ்வொருவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுக்கிறாள் என்பது ஐதீகம்.
தை வெள்ளிக்கிழமைகளிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளிலும் வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தை மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையில் வெக்காளியம்மனை தரிசிப்போம்.
வெக்காளியம்மனை மனதில் நினைத்துக் கொண்டு, மஞ்சள் துணியில் காசு முடிந்து, வீட்டில் இருந்தபடியே வேண்டிக்கொள்வோம். பிறகொரு நாளில், அம்மனைத் தரிசித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோம்.
மனக்குறைகள் தீர்த்தருளுவாள். மங்கல காரியங்களை நடத்திக் கொடுப்பாள் வெக்காளியம்மன். இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுப்பாள் அன்னை!