

அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவியை மனதார வழிபடுங்கள். இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் தேவி.
கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது கும்பகோணம். இந்த ஊருக்கு அருகில் மிக முக்கியமான நகரம் திருநாகேஸ்வரம். திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில், ஒப்பிலியப்பன் கோயில் என்று அருகருகே இருக்கின்றன. இதே திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள இன்னொரு அற்புதமான ஆலயம், அய்யாவாடி திருத்தலம்.
அய்யாவாடி என்ற திருத்தலத்தில்தான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபிரத்தியங்கிராதேவி. அய்யாவாடி என்றால் ஐவர் பாடி என்று அர்த்தம். ஐவர் பாடி என்பது, பஞ்சபாண்டவர்களைக் குறிக்கும். பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து, இந்தத் திருத்தலத்தில் உள்ள பிரத்தியங்கிரா தேவியை தவமிருந்து வழிபட்டனர். பலன் பெற்றனர். வனவாசம் இருந்த காலகட்டத்தில், சொத்துகளை இழந்து, ராஜாங்கத்தை இழந்து, சாப்பிட வகையில்லாமல், தூங்குவதற்கு இடமில்லாமல் தவித்துக் கலங்கிய வேளையில், பிரத்தியங்கிரா தேவியை வழிபடுங்கள்; கடும் தவம் மேற்கொள்ளுங்கள் என அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.
அதன்படி, இடம் தேடி வந்தார்கள். அங்கே சுயம்பு மூர்த்தமாக காட்சி தந்தாள் பிரத்தியங்கிரா தேவி. நெக்குருகிப் போனார்கள் பாண்டவர்கள். அது சித்திரை மாதம் என்பதால் பூக்கள் கிடைக்கவில்லை. அங்கே ஆலமரம் இருந்தது. மரத்தில் இருந்து இலையைப் பறித்தார்கள். அந்த இலையை, பூக்களாக பாவித்து தேவிக்கு அர்சித்து பூஜித்தார்கள். நெடுங்காலம் இந்த பூஜையைத் தொடர்ந்து மேற்கொண்டார்கள். ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்து வந்தார்கள். அதன் பலனாக, பாண்டவர்கள் பகைவர்களை வென்றார்கள். இழந்த கெளரவத்தையும் மரியாதையையும் புகழையும் செல்வத்தையும் ராஜாங்கத்தையும் தேசத்தையும் மீட்டெடுத்தார்கள்.
பஞ்சபாண்டவர்கள் பிரத்தியங்கிரா தேவியை வழிபட்ட அந்தத் திருவிடம் ஐவர்பாடி என்று அழைக்கப்பட்டு பின்னர் ஐயாவாடி என்று அழைக்கப்படுகிறது.
திருநாகேஸ்வரத்துக்கு அருகில் உள்ள அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி, மகா சக்தி கொண்டவள். மகோன்னத குணங்கள் நிறைந்தவள். நல்லவர்களுக்கு உண்டாகிற எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்குபவள். இழந்தவற்றையெல்லாம் மீட்டுக் கொடுப்பவள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
அய்யாவாடி திருத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை தோறும், இங்கே சிறப்பு யாகங்களும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் பிரத்தியங்கிரா தேவிக்கு விமரிசையாக நடைபெறும்.
அய்யாவாடி பிரத்தியங்கிராதேவியை தரிசிப்போம். நாம் இதுவரை வாழ்வில் இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்திடுவாள் தேவி. இன்னல்களையெல்லாம் துடைத்தெடுத்து அருளுவாள் அம்பாள்.