கடன் பிரச்சினை தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்!  கடனில் சிறு தொகையேனும் கொடுங்கள்

 கடன் பிரச்சினை தீர்க்கும் மைத்ர முகூர்த்தம்!  கடனில் சிறு தொகையேனும் கொடுங்கள்
Updated on
1 min read

மைத்ர முகூர்த்தத்தில் மிகப்பெரிய கடன் தொகையில் கடுகளவு கடனாவது அடையுங்கள். வெகு சீக்கிரத்திலேயே அனைத்துக் கடன்களையும் அடைத்து நிம்மதியாக வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 21ம் தேதி வியாழக்கிழமை மைத்ர முகூர்த்த நாள். இந்த நாளில் உள்ள மைத்ர முகூர்த்த நேரத்தில் கடனைச் செலுத்துங்கள்.

கடன் என்பது கர்மவினைகளால் ஏற்படுவது என்று விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம். ’தேவகடன், ரிஷி கடன், பித்ருக் கடன்’ என்று இந்த ஜென்மமே கடன்களால் பிறப்பெடுத்திருக்கிறது. இந்த வாழ்க்கையில், ஒருவர் இன்னொருவருடன் கடன் வாங்குவதும் வட்டிக்கு பணம் வாங்குவதும் முந்தைய கர்மவினைகளின் விளைவு என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

கடன், நோய், எதிரி, துன்பங்கள், மன உளைச்சல், அவமானம் என வாழ்வில் ஒவ்வொரு விதமாக எதையோ அனுபவித்து உழன்றுகொண்டுதான் இருக்கிறோம். இவையெல்லாம் கர்மவினைகளால் ஏற்படுபவை.

முன்பெல்லாம் கடன் வாங்குவது கெளரவக் குறைச்சலாக இருந்தது. இன்றைய கலிகாலத்தில் எல்லாம் இ.எம்.ஐ. என்றாகிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு, நூற்றுக்கு பத்துபேர் கடன் வாங்கினார்கள். ஆனால் இன்றைக்கு நூற்றுக்கு பத்துபேர்தான் கடன் வாங்காமல் இருக்கிறார்கள். இப்போது வீடு, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், தொழில், வியாபாரம் என ஏதேனும் ஒன்றுக்காகக் கடன் வாங்கிக் கொண்டிருப்பவர்களே அதிக அளவில் இருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில், இந்தக் கடனே நம் நிம்மதியைக் குலைத்துப் போடுகிறது. சந்தோஷமாக இருப்பதற்காக வாங்குகிற கடனே, நம் சந்தோஷங்களைக் கபளீகரம் செய்துவிடுகிறது. நிம்மதியில்லாமலும் தூக்கமில்லாமலும் எத்தனையோ பேர், கடனால் மருகிக் கலங்கி, தவித்துக் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள், மேஷ லக்னம் அமைந்துள்ளதே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது. செவ்வாய்க்கிழமையும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள், விருச்சிக லக்னம் அமைந்துள்ளதே மைத்ர முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவேளை, லக்கினமும் நட்சத்திரமும் இணைந்து, செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 சதவிகிதப் பலன்கள் நிச்சயம் என்றும் அவையும் மைத்ர முகூர்த்தம் என்றே கொள்ளலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதன்படி, 21ம் தேதி வியாழக்கிழமை மைத்ர முகூர்த்தம். நாளைய தினம் மைத்ர முகூர்த்தம். இந்த நாளில், மைத்ர முகூர்த்த நேரம் என்பது மதியம் 1.10 முதல் 3.10 மணி வரையிலான காலம். இந்த நேரத்தில், அடகில் இருக்கும் நகைக்கு சிறிதளவேனும் பணம் கட்டலாம். எவரிடமேனும் வாங்கிய கடன் தொகையில் சிறு தொகையைத் திருப்பிச் செலுத்தலாம்.

மளிகைக் கடைக்கோ பால்காரருக்கோ தரவேண்டிய தொகையில் சிறு தொகையைக் கொடுப்பதும் பலன்களைத் தரும். விரைவில் கடன் பிரச்சினைகளில் இருந்தும் கடன் தொல்லையில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in