எமதருமனுக்கு சந்நிதி; படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள்!  - திருப்பைஞ்ஞீலி திருத்தல அதிசயம்

எமதருமனுக்கு சந்நிதி; படிக்கட்டுகளாக நவக்கிரகங்கள்!  - திருப்பைஞ்ஞீலி திருத்தல அதிசயம்
Updated on
2 min read

திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்தால் கல்யாண பாக்கியம் கைகூடும். நீண்ட ஆயுளுடன் வாழலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்! இங்கே எமனுக்கு சந்நிதி உள்ளது. நவக்கிரகங்கள் ஒன்பது படிக்கட்டுகளாக அமைந்திருக்கின்றன.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். ஞீலி என்றால் கல்வாழை என்று அர்த்தம். இது ஒருவகை வாழை. ஞீலிவனமாக வாழைத் தோப்பாக இருந்த இந்தத் தலத்தில் சிவனார் வெளிப்பட்டதால், ஞீலிவனநாதர் என்று பெயர் அமைந்தது. கோயிலின் ஸ்தல விருட்சம் வாழைதான். அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்.

திருமண பரிகாரத் திருத்தலம் இது. சப்த கன்னியரே கல்வாழையாக இருக்கின்றனர் என்பதாக ஐதீகம். கோயிலுக்கு கோபுரமில்லை. பாதியில் கட்டப்பட்ட நிலையிலேயே மொட்டை கோபுரமாகத் திகழ்கிறது. கடைவீதியையொட்டி இருக்கிற இந்த கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும் நீண்ட விஸ்தாரமான பாதையில் நான்குகால் மண்டபம் அமைந்திருக்கிறது.

அடுத்து ராவணன் வாசல் என்று சொல்லப்படும் இரண்டாவது கோபுர வாசல் உள்ளது. இந்த இடத்தில் வெளிப்பிரகராம் அமைந்திருக்கிறது. இந்தப் பிராகாரத்தில் எந்தத் தலத்திலும் இல்லாத வகையில், அரிதினும் அரிதாக இருக்கிறது எமன் சந்நிதி.

கொஞ்சம் பள்ளமாகவும் குடைவரைக்கோயிலாகவும் அமைந்திருக்கிறது எமதருமனின் சந்நிதி. சோமாஸ்கந்தர் வடிவில் சிவனாரும் அம்பாளும் நடுவில் முருகப்பெருமானும் இருக்க, சுவாமியின் திருப்பாதத்துக்குக் கீழே, ஒரு குழந்தையின் வடிவில் எமதருமன் காட்சி தருகிறார்.

திருக்கடையூர், ஸ்ரீவாஞ்சியம் போலவே திருப்பைஞ்ஞீலி தலத்துக்கும் எமதரும ஸ்தலமாகப் போற்றப்படுகிறது இந்தத் தலம். திருக்கடையூர் க்ஷேத்திரத்தில், மார்க்கண்டேயனுக்காக எமதருமனை காலால் உதைத்து சம்ஹரித்தார் சிவபெருமான். பிரம்மா இருந்தால்தான் படைப்புத் தொழில். எமன் இருந்தால்தான் மரணம். எமனை சம்ஹரித்ததால் இறப்பு என்பதே உலகில் இல்லாமல் போனது.

இதனால் பூமியில் மனித பாரம் ஏறிக்கொண்டே போனது. பூமாதேவி சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். தேவர்களும் முனிவர் பெருமக்களும் முறையிட்டார்கள். எமதருமனை உயிர்ப்பியுங்கள். எமனை மன்னித்து உலகை வாழவையுங்கள் என வேண்டினார்கள். அதன்படி, சிவபெருமான் எமனுக்கு உயிரூட்டினார். குழந்தையாக தன் பாதத்தில் இருத்தி அருளினார். தர்மத்தைக் காப்பாயாக என வரம் தந்தார்.

அப்படி எமனுக்கு அருளிய தலமாகப் போற்றப்படுகிறது திருப்பைஞ்ஞீலி. திருக்கடையூர் போலவே திருப்பைஞ்ஞீலியிலும் சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் பரிகார ஹோமங்கள், சதாபிஷேகம் முதலான வைபவங்கள் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்துவது இங்கே விசேஷமாகப் போற்றப்படுகிறது.

அதுமட்டுமா? இன்னொரு சிறப்பும் இந்தக் கோயிலுக்கு உண்டு.

சனீஸ்வர பகவானுக்கு அதிபதி எமதருமராஜன். இங்கே, திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் எமதருமனுக்கு சந்நிதி இருப்பதால், சனீஸ்வரரை உள்ளடக்கிய நவக்கிரகத்துக்கு சந்நிதி இல்லை. மாறாக, ராவண கோபுர வாசலை அடுத்து சுவாமியை தரிசிக்கச் செல்லும் போது ஒன்பது படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது படிக்கட்டுகளும் நவக்கிரகங்களாகவே திகழ்கின்றன என்றும் இந்தப் படிகளைக் கடந்து சிவ சந்நிதிக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு கிரக தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதும் உறுதி என்கிறார் கோயிலின் சங்கர குருக்கள்.

சிவனாரின் சந்நிதிக்கு எதிரில் நந்தி உள்ளது. நந்திக்கு அருகே ஒன்பது குழிகள் இருக்கின்றன. இந்த ஒன்பது குழிகள் தீபமேற்றி, நவக்கிரக வழிபாடாகச் செய்கிறார்கள் பக்தர்கள்.

திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்தால் கல்யாண பாக்கியம் கைகூடும். நீண்ட ஆயுளுடன் வாழலாம். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in