

நாமகிரித் தாயாரின் கண்கள், தாமரைக்கு நிகரான அழகையும் தீட்சண்யத்தையும் கொண்டவை. அவளின் திருமுகம், தாமரை நிகரானவை. எனவே, முடியும்போதெல்லாம் நாமகிரித்தாயாரை தரிசிப்பதும் தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்து பிரார்த்தனைகள் செய்வதும் அளவற்ற பலன்களைத் தந்தருளும். சகல ஐஸ்வர்ய கடாக்ஷங்களையும் வழங்கும் என்பது ஐதீகம்!
நாமக்கல் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஆஞ்சநேயர் பெருமான். அதே நாமக்கல்லில் நரசிம்மர் அற்புதமாகக் கோயில்கொண்டிருக்கிறார்.
மகாலக்ஷ்மி தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க, நரசிம்மர் தன் உக்கிரம் தணித்தார். கோபம் தவிர்த்தார். சாந்தமான நரசிம்மர், மகாலக்ஷ்மி தாயாருக்கு வரங்களைத் தந்தருளினார். பின்னர் இருவரும் இந்தத் தலத்தில்... நாமக்கல் தலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கத் தொடங்கினார்கள் என்கிறது ஸ்தல புராணம்.
நாமக்கல் தலத்தில் நரசிம்மரின் திருநாமம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர். தாயாரின் திருநாமம் ஸ்ரீநாமகிரித் தாயார்.
குகைக்கோயிலாகத் திகழ்கிறது நாமக்கல் நரசிம்மர் திருத்தலம். குடைவரைக் கோயிலும் அழகு. இங்கே உள்ள சிற்பநுட்பங்களும் கலைநயத்துடன் காட்சி தருகின்றன.
வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் நரசிம்ம மூர்த்தி. மதுரை ஒத்தக்கடையில் அமைந்துள்ள நரசிம்மர் யோக நரசிம்மராகத் திகழ்கிறார். அங்கே மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கே... நாமக்கல்லில் அர்த்தமண்டபமும் மூலவர் குடிகொண்டிருக்கும் கருவறையும் கூட, குடைவரையாகவே அமைக்கப்பட்டுள்ளன.
நரசிம்ம மூர்த்தியுடன் சனகர், சனாதனர், சூரிய பகவான், சந்திர பகவான் மற்றும் சிவபெருமான், பிரம்மா முதலானோரையும் தரிசிக்கலாம். அதனால்தான் திருமூர்த்தி ஸ்தலங்களில் நாமக்கல்லும் ஒன்று என்றுப் போற்றப்படுகிறது.
மேலும் சங்கரநாராயணரையும் இங்கே தரிசிக்கலாம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நரசிம்மரை தரிசித்து வேண்டிக்கொண்டால், எதிர்ப்புகள் அகலும்; எதிரிகள் பலமிழப்பார்கள்; காரியம் யாவும் வெற்றியைத் தருவது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இதேபோல், நாமகிரித்தாயாரும் கருணையே உருவானவள். மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள். நாமக்கல் நாமகிரித்தாயாரின் ஆலயத்துக்கு வந்து, சந்நிதியில் நின்றுகொண்டு தாயாரிடம் நாம் முறையிட்டால் போதும்... அவற்றையெல்லாம் கேட்டறிவாள்; நாம் வைக்கும் கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றித் தருவாள் நாமகிரித் தாயார்.
வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் நாமகிரித் தாயாருக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தியும் தாமரை மலர்கள் அணிவித்தும் வேண்டிக்கொண்டால், சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைப்பார் தாயார். தீர்க்கசுமங்கலியாக வாழவைப்பாள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.
நாமகிரித்தாயாருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வீட்டில் இருந்தபடியே மனதார வேண்டிக்கொள்ளலாம். நாமகிரித் தாயாரின் கண்கள், தாமரைக்கு நிகரான அழகையும் தீட்சண்யத்தையும் கொண்டவை. அவளின் திருமுகம், தாமரை நிகரானவை. எனவே, முடியும்போதெல்லாம் நாமகிரித்தாயாரை தரிசிப்பதும் தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்து பிரார்த்தனைகள் செய்வதும் அளவற்ற பலன்களைத் தந்தருளும். சகல ஐஸ்வர்ய கடாக்ஷங்களையும் வழங்கும் என்பது ஐதீகம்!