Last Updated : 20 Jan, 2021 12:28 PM

 

Published : 20 Jan 2021 12:28 PM
Last Updated : 20 Jan 2021 12:28 PM

ஒரு தர்மம் செய்தால் கோடி தர்மம் செய்த பலன் நிச்சயம் ;  நினைத்தாலே, தரிசித்தாலே, பிறந்தாலே முக்தி தரும் திருவெண்காடு! 

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் என்று திருவண்ணாமலையைச் சொல்லுவார்கள். பிறக்க முக்தி நிச்சயம் என்று திருவாரூரைச் சொல்லுவார்கள். அதாவது திருவாரூரில் பிறந்தாலே முக்தி நிச்சயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காசியில் இறந்தால் முக்தி நிச்சயம் என்பார்கள். தில்லை என்று சொல்லப்படும் சிதம்பரத்தில் தரிசித்தால் முக்தி என்பார்கள். இவை அனைத்தும் கொடுக்கின்ற தலமாக, கிடைக்கின்ற தலமாக போற்றப்படுகிறது, திருவெண்காடு க்ஷேத்திரம்.

சீர்காழிக்கு அருகில் உள்ளது திருவெண்காடு திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர். அம்பாளின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. மிகப் பிரமாண்டமான திருத்தலம். புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம்.

நவக்கிரக பரிகாரக் கோயில்களில் இந்தத் தலமும் ஒன்று. நவக்கிரகங்களில் ஒரு கிரகமான புதன் பகவானுக்கான க்ஷேத்திரம் இது. புதன் பகவானுக்கு இங்கே தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது.

நினைத்தால் முக்தி தரும் தலம், தரிசித்தால் முக்தி தரும் தலம், பிறந்தால் முக்தி தரும் தலம், இறந்தால் முக்தி தரும் தலம் என அனைத்தையும் ஒருங்கே தந்தருளக்கூடிய தலமாகப் போற்றப்படுகிறது திருவெண்காடு. அதனால்தான் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வர் திருத்தலத்தை, முக்தி நகர் என்றும் முக்தி வாயில் என்றும் போற்றுகிறது ஸ்தல புராணம்.

அதுமட்டுமா?

தில்லை என்று சொல்லப்படும் சிதம்பரத்தில் நடராஜ பெருமான் திருநடனம் புரிந்தார். ஆனால் அதற்கு முன்னதாக திருவெண்காடு தலத்தில்தான் நடனமாடினார் என்கிறது ஸ்தல புராணம். அதனால் இந்த க்ஷேத்திரத்துக்கு ஆதி சிதம்பரம் என்றும் பெயர் உண்டு.

வேதங்கள் பூஜித்து வழிபட்ட தலம் என்பதால், வேத வெண்காடு என்றே புகழப்படுகிறது. ஸ்வேதன் எனும் அரசன் இங்கே வழிபட்டதால், ஸ்வேதாரண்யம் என்றும் ஸ்வேத வனம் என்றும் பெயர் அமைந்தது.

விநாயகர் இங்கே வழிபட்டார் என்பதால் விநாயகபுரம், கணபதிபுரம் என்றும் ஸ்ரீபிரம்மாவுக்கு மயானமாகவே இந்தத் தலம் திகழ்ந்ததால், ஞானவனம் என்றும் பெரிய மயானம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கே ஸ்வேதாரண்யேஸ்வரர், அகோர மூர்த்தி, புதன் பகவான் என மூவருக்கும் சந்நிதிகள் உள்ளன. மூவரையும் நினைத்தாலும் வணங்கினாலும் முக்தி நிச்சயம். திருவெண்காடு திருத்தலத்துக்கு ஏகப்பட்ட பெயர்கள் உண்டு. இவற்றில் எந்தப் பெயரைச் சொல்லி நாம் நினைத்துக் கொண்டாலும் யாகங்களும் ஹோமங்களும் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் தீரும் என்கிறார்கள்.

வறுமை நிலை மாறும். ஐஸ்வர்ய கடாக்ஷம் கிடைக்கப்பெறலாம் என்பது ஐதீகம்!

திருவெண்காடு தலத்துக்கு வந்து நாம் செய்கிற ஒரேயொரு தர்மச்செயலானது, கோடி தர்மம் செய்த பலன்களைக் கொடுக்கவல்லது என்பதால், இந்தத் தலத்துக்கு தர்மகோடி என்றும் பெயர் உண்டு என்கிறது ஸ்தல புராணம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x