Published : 19 Jan 2021 05:13 PM
Last Updated : 19 Jan 2021 05:13 PM

முத்தங்கி சேவையில் நாமக்கல் அனுமன்; இழந்தது கிடைக்கும்; ராஜயோகம் தருவார்! 

நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவையில் தரிசித்தால், ராஜயோகம் கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மேலும் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்தருளுவார் அனுமன் என்று போற்றுகிறார்கள்.

ஆஞ்சநேயர் என்றதும் சட்டென்று நம் நினைவுக்கு வரும் திருத்தலம் நாமக்கல். இந்த ஊரில், பிரமாண்டமான உயரத்துடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அனுமன்.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வருடத்தில், கார்த்திகை மாதத்திலும், மார்கழி மாதத்திலும், தை மாதத்திலும் வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடத்தப்படுகிறது. பிரமாண்ட அனுமனை, வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்.

மார்கழி மாதத்தில் வருகிற மூல நட்சத்திரம் அனுமன் ஜயந்தித் திருநாளாக அனைத்து வைஷ்ணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் திருத்தலத்தில் உள்ள அனுமனுக்கு, ஜயந்தித் திருநாளின் போது ஒரு லட்சத்து 8 ஆயிரம் வடைகளைக் கொண்டு, பிரமாண்டமான வடைமாலை சார்த்தப்படுகிறது. இந்தநாளில் அனுமனைத் தரிசிப்பதற்காக, லட்சக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் தலத்துக்கு வருகின்றனர்.

வைஷ்ண தலங்களில், விநாயகருக்கு சந்நிதி இருப்பது அரிது. ஆனால் நாமக்கல் அனுமன் கோயிலில் விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இந்த விநாயகர் பெருமானுக்கு மாதந்தோறும் சதுர்த்தியிலும் சங்கடஹர சதுர்த்தியிலும் விநாயக சதுர்த்தி நன்னாளிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

நாமக்கல் தலத்தின் நாயகனான அனுமனுக்கு பிரமாண்டமான துளசி மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. அதேபோல, வெற்றிலை மாலைகளும் அணிவிக்கப்படுகின்றன. அனுமனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, இந்த துளசியையும் வெற்றிலையையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. வெற்றிலையும் துளசியும் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு அனுமனை தரிசித்துப் பிரார்த்தித்தால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும் என்கிறார்கள் அனுமன் பக்தர்கள்.

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றும் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி நாமக்கல், சேலம், ஈரோடு, குமாரபாளையம், கரூர் முதலான சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

நாமக்கல் திருத்தலத்தின் அனுமரை, முத்தங்கி சேவையில் தரிசிப்பது ராஜயோகம் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அனுமனுக்கு வடை மாலை சார்த்துவதாகவும் முத்தங்கி சேவை செய்வதாகவும் வேண்டிக்கொள்ளூம் பக்தர்களும் உண்டு. முத்தங்கி சேவையில் அனுமனைத் தரிசிப்பது மகத்தான பலன்களைக் கொடுக்கும் என்றும் ராஜயோகம் கிடைக்கப் பெறலாம் என்றும் பக்தர்களும் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் அனுமனை கண்ணாரத் தரிசியுங்கள். ராஜயோகம் கிடைக்கப் பெறுவீர்கள். சனி பகவானின் கோபத்தில் இருந்தும் தாக்கத்தில் இருந்தும் நம்மைக் காத்தருளுவார் ஆஞ்சநேயர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x