

சென்னை காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றால், காளிகாம்பாளையும் பிரத்தியங்கிரா தேவியையும் தரிசிக்கலாம். செவ்வாய், வெள்ளியில் காளிகாம்பாளை தரிசியுங்கள். அப்படியே பிரத்தியங்கிரா தேவியையும் வழிபடுங்கள். வற்றாத செல்வமும் மனோபலமும் தந்தருள்வாள் தேவி.
சென்னை பாரிமுனை தம்புச்செட்டித் தெருவில் அமைந்திருக்கிறது காளிகாம்பாள் கோயில். வீர சிவாஜி வழிபட்ட காளிகாம்பாள் என்று ஆலய சரிதம் சொல்லுகிறது. மகாகவி பாரதியார் வழிபட்ட திருத்தலம் என்று போற்றப்படுகிறது.
சக்தி மிக்கவள் காளிகாம்பாள். சாந்நித்தியம் மிக்கவள் காளிகாம்பாள். பொதுவாகவே, காளிதேவியானவள் உக்கிர தெய்வம் என்பார்கள். தீயசக்திகளை அழிக்கப் புறப்பட்டவள் காளிதேவி. தீயசக்திகளை அழித்தும் அதே உக்கிரத்துடன் இருப்பவள் என்றெல்லாம் விவரிக்கிறது புராணம்.
ஆனால், சென்னை பாரிமுனையில் கோயில்கொண்டிருக்கும் காளிகாம்பாள், சாந்தமே உருவானவள். கருணையே வடிவானவள். கனிவுப்பிரவாகமெடுத்துக் காட்சி தருபவள். சாந்த சொரூபியாக நமக்குக் காட்சி தந்தாலும் நமக்கு அருள்மழையைப் பொழிந்தாலும் துர்குணக்காரர்களையும் தீயசக்திகளையும் அதே உக்கிரத்துடன் நொடிப்பொழுதில் அடக்கியாளும் மகாசக்தியாகவே திகழ்கிறாள் காளிகாம்பாள்.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் காளிகாம்பாளைத் தரிசிக்க எங்கிருந்தெல்லாமோ வருகின்றனர் பக்தர்கள். பாரிமுனையில் கடை வைத்திருப்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும் தினமும் காளிகாம்பாளைத் தரிசித்துவிட்டுத்தான் கடைகளைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
கிழக்குப் பார்த்த ஆலயத்தில், மேற்குப் பார்த்தபடி அகிலத்தையே தன் அருட்பார்வையில் ஆட்சி செய்கிறாள் காளிகாம்பாள் அன்னை. இந்தக் கோயிலில், பிரத்தியங்கிரா தேவியையும் தரிசிக்கலாம்.
இங்கே, சுதைச்சிற்பமாக, மிகப்பிரமாண்டமான தோற்றத்தில் காட்சி தந்து அருள்பாலிக்கிறார் பிரத்தியங்கிரா தேவி.
சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வாருங்கள். காளிகாம்பாளுக்கு தாமரையும் செவ்வரளியும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். செவ்வரளி மாலை சார்த்தி பிரத்தியங்கிரா தேவியை மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
மங்காத செல்வம் தந்தருள்வாள் தேவி. நம்மைச் சுற்றியுள்ள எதிர்ப்புகளையும் தீயசக்திகளையும் அழித்துக் காப்பாள் அன்னை!