

சஷ்டியில் வேலவனை தரிசிப்போம். வேண்டியதையெல்லாம் தந்திடுவான் ஞானவேலன். தடைகளையெல்லாம் தகர்த்திடுவான் செந்தில்வேலன்.
ஆறுபடை வீடுகளின் நாயகன் முருகப்பெருமான். படைகளைத் திரட்டி அசுரக்கூட்டத்தை ஒழித்த வீராதி வீரன் என்று முருகக் கடவுளைப் போற்றுகிறது கந்த புராணம்.
ஆறுபடைவீடுகள் என்றில்லாமல், எண்ணற்ற திருக்கோயில்கள், சக்திவேலனுக்கு அமைந்திருக்கின்றன. செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். முருகப்பெருமானை வணங்கினால், செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ஆறுபடை வீடுகள் மட்டுமா? குன்றிருக்கும் இடத்திலெல்லாம் குமரன் இருக்கிறான் என்பதற்கேற்ப, எத்தனையோ கோயில்கள், மலையின் மீதும் குன்றின் மீதும் அமைந்திருக்கின்றன. சிவாலயங்களில் உள்ள முருகக் கடவுளுக்கும் தனிச்சாந்நித்தியம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
சக்திவேலனாக, வெற்றிவேலனாக, குழந்தை வடிவேலனாக நமக்கு அருள்மழை பொழிந்து கொண்டிருக்கும் முத்துக்குமரனை, ஞானகுரு என்றும் போற்றிக் கொண்டாடுகின்றனர் பக்தர்கள்.
பிரணவத்தின் பொருளை தந்தை சிவனாருக்கே உபதேசித்ததால் ஞானகுருவாகத் திகழ்கிறார். ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன்’ என்று புகழப்படுகிறார். அதனால்தான், சுவாமிநாதன் என்ற பெயரே அமைந்தது.
தை மாதத்தின் பூச நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உரிய நாள். பூச நட்சத்திர நாளை திருநாளாக, வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வருகிற சஷ்டியும் விசேஷமானதுதான். தைப்பூசத்தையொட்டி, விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள மக்கள் பலரும், முருகப்பெருமானுக்கு விரதம் இருக்கத் தொடங்கிவிடுவார்கள். தைப்பூசத்துக்கு ஒருவாரம் இருப்பதற்கு முன்னதாக, ஊரில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.
தைப்பூச நாளன்று பழநி மலையேறி, முருகப்பெருமானைத் தரிசிப்பார்கள். தைப்பூசம் போலவே சஷ்டியும் மிக முக்கியமான விசேஷமான தினம். தை மாத சஷ்டியில், கந்தனை வேண்டிக்கொண்டு, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, முருகப்பெருமானை மனதார பிரார்த்தனை செய்துகொள்ளுவோம்.இன்று 18ம் தேதி சஷ்டி. மாலையில் முருகக் கடவுளை வழிபடுங்கள்.
நினைத்ததையெல்லாம் முடித்துக் கொடுப்பார் வெற்றிவேலன். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்குவார் கந்தவேலன். காரியத்தில் வெற்றியைத் தந்தருளுவார் ஞானக்குமரன்!