Last Updated : 15 Jan, 2021 07:33 PM

 

Published : 15 Jan 2021 07:33 PM
Last Updated : 15 Jan 2021 07:33 PM

சனிக்கிழமை... சனி ஓரை... அனுமன் வழிபாடு! 


சனிக்கிழமைகளிலும் சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு வருவது அல்லல்களையெல்லாம் போக்கி அருளக்கூடியது. மனதில் பயத்தைப் போக்கக்கூடியது. மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்திக் கொடுப்பார் அனுமன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வீரத்தையும் ஞானத்தையும் தந்தருள்பவர் அனுமன் என்று போற்றுகிறது புராணம். அனுமன் வழிபாடு செய்யச் செய்ய, வலிமையும் உறுதியும்கொண்ட மனத்துடன் காரியமாற்றலாம். காரியம் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் ஆஞ்சநேயர் என்கிறது ராமாயணம்.

சக்திக்கு உதாரணமாகத் திகழ்பவர் மட்டுமல்ல ஆஞ்சநேயர். பக்திக்கும் உதாரண புருஷராகத் திகழ்கிறார். பக்தியில் சிறந்தது அனும பக்தி என்பார்கள். ஸ்ரீராமபிரான் மீது, அத்தனை அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர். அதனால்தான் பல ஆலயங்களிலும் கைகூப்பிய நிலையில் சந்நிதி கொண்டிருக்கும் அனுமனைத் தரிசிக்கிறோம்.
எப்போதும் மனதில் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியையும் சீதா பிராட்டியையும் நெஞ்சில் வரித்திருப்பவர் என்று கம்பர் பெருமான் மிக அழகாக வர்ணித்துள்ளார். அனுமனை வழிபட்டால், ஸ்ரீராமரின் பேரருளையும் பெறலாம். அதேபோல், ஸ்ரீராமரை வழிபட்டால், அனுமனின் அகம் குளிர்ந்து அருளுவாராம்.

சனி பகவானின் ஆதிக்கம்தான், நம் வாழ்க்கையின் சகலத்துக்கும் காரணம். அதனால்தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். எப்படி இருக்கும் என்று கலவரமாகிறோம். அனுமனின் பக்தர்கள், சனி பகவானின் பெயர்ச்சி குறித்தோ, சனி பகவான் என்ன செய்வாரோ என்ன நடக்குமோ என்பது குறித்தெல்லாம் வருந்தத் தேவையில்லை. அனுமனின் அருளிருந்தால், சனீஸ்வரரின் தாக்கம் வெகுவாக இருக்காது. அவரின் பரிபூரண அருளையும் பெறலாம் என்கிறது புராணம்.

எனவே, சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது மிகவும் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. சனிக்கிழமையன்று அனுமனை வழிபடுவது போலவே சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், சகல எதிர்ப்புகளும் தவிடுபொடியாகும். இன்னல்களில் இருந்தெல்லாம் மீள்வீர்கள் என்பது உறுதி என்கிறார் ஸ்ரீநிவாஸ பட்டாச்சார்யர்.

அனுமன் சாலீசா சொல்லி பாராயணம் செய்யுங்கள். அனுமனுக்கு வெற்றிலை மாலையும் துளசி மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வார் அனுமன். சனி பகவானின் கோபத்தில் இருந்தும் தாக்கத்தில் இருந்தும் நம்மை அரணெனக் காப்பார் அனுமன்!

ராமபக்த அனுமனை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் துன்பங்களெல்லாம் அந்த வெண்ணைய் போலவே உருகிப் போகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x