Last Updated : 15 Jan, 2021 05:15 PM

 

Published : 15 Jan 2021 05:15 PM
Last Updated : 15 Jan 2021 05:15 PM

சுக்ல சதுர்த்தியில் பிள்ளையாருக்கு அருகம்புல்! 

சுக்ல சதுர்த்தியில் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். நாளைய தினம் 16ம் தேதி சனிக்கிழமை சுக்ல பட்ச சதுர்த்தி. அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் செல்லுங்கள். வீட்டில் உள்ள பிள்ளையாரை மனதார வணங்குங்கள். சகல கஷ்டங்களையும் தோஷங்களையும் போக்கி அருளுவார் ஆனைமுகத்தான்.

சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்தது. இந்த நாளில் விரதமிருந்து முருகக் கடவுளை ஆராதிப்பார்கள் பக்தர்கள். அதேபோல் ஏகாதசி திதி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள். இந்தநாளில், பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்வார்கள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வார்கள்.

இதேபோல், அஷ்டமி திதி பைரவருக்கானது. பைரவரை இந்தநாளில் வழிபடுவது விசேஷம். பஞ்சமி திதி வாராஹி தேவிக்கு உரிய நாள். இந்தநாளில், வாராஹியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்வார்கள் பக்தர்கள்.

சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானுக்கு உகந்தநாள். ஒரு மாதத்தில் இரண்டு சதுர்த்திகள் வரும். இதை சுக்ல சதுர்த்தி, கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்று வரும். சுக்ல பட்சம் என்றால் வளர்பிறைகாலம். அமாவாசையில் இருந்து பெளர்ணமி வரையிலான காலம் சுக்ல பட்சம். அடுத்து கிருஷ்ண பட்சம் என்பது பெளர்ணமியில் இருந்து அமாவாசை வரையிலான காலம். கிருஷ்ண பட்சம் என்பது தேய்பிறைக் காலம்.

கிருஷ்ண பட்சத்தில் வருகிற சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. என்றாலும் சுக்ல பட்ச சதுர்த்தியும் விசேஷமானதுதான். வளர்பிறை சதுர்த்தியில், விரதமிருந்து மேற்கொள்வார்கள் பக்தர்கள். வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் எதிர்ப்புகளையெல்லாம் வலிமை இழக்கச் செய்யும். இன்னல்களையெல்லாம் போக்கிவிடும். சுண்டல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

நாளைய தினம் சனிக்கிழமை 16ம் தேதி சுக்ல சதுர்த்தி. இந்த நன்னாளில், விநாயகர் அகவல் பாராயணம் படிப்பது, குடும்பத்தில் மேன்மையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும். தம்பதி இடையே உள்ள கருத்து வேற்றுமைகள் நீங்கும்.

அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று ஆனைமுகனை கண்ணாரத் தரிசித்து வேண்டிக் கொள்ளுங்கள். சனிக்கிழமையும் சதுர்த்தியும் இணைந்த நாளில், பிள்ளையாரைப் பிரார்த்தனை செய்து கொண்டு சிதறுகாய் உடைத்து வேண்டுங்கள். சிக்கல்களெல்லாம், கஷ்டங்களெல்லாம் சிதறுகாய் போல் தூள்தூளாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x