Last Updated : 15 Jan, 2021 03:25 PM

 

Published : 15 Jan 2021 03:25 PM
Last Updated : 15 Jan 2021 03:25 PM

தை வெள்ளி; வீட்டுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்; கண்ணேறு கழித்தால் காரிய வெற்றி நிச்சயம்! 

தை வெள்ளிக்கிழமையில், வீட்டுக்கும் நம் வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கும் மாலையில் திருஷ்டி சுற்றிப் போடுங்கள். தை மாதத்திலும் வெள்ளிக்கிழமைகளிலும் கண்ணேறு கழித்தால், இதுவரை இருந்த தடைகள் விலகும், காரியத்தில் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வழிபாடுகள் மிக மிக முக்கியமானவை. இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நல்லவற்றையெல்லாம் வழங்க கூடியதாக வழிபாடுகளும் பூஜைகளும் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன.

ஒவ்வொரு தெய்வத்தையும் அந்த தெய்வத்தை வணங்குவதற்கு உரிய முறைகளையும் நாட்களையும் திதிகளையும் நட்சத்திரங்களையும் என்றெல்லாம் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். அதன்படி ஒவ்வொரு தெய்வத்துக்குமான மந்திரங்கள், ஸ்லோகங்கள், பாடல்கள், பதிகங்கள் என அமைந்திருக்கிறது.

அப்படித்தான் தை மாதமும் வழிபாடுகளும்! தை மாதத்தில்தான் இயற்கையை வணங்கி வழிபடுகிறோம். தை மாதத்தில்தான் முக்கிய தெய்வங்களுக்கான விசேஷமான நாட்களைச் சொல்லிவைத்திருக்கிறார்கள் ஆச்சார்யர்கள். தை மாதத்தில்தான், கால்நடைகளையும் வணங்கிப் போற்றி வருகிற பண்டிகைகளும் அமைந்திருக்கின்றன.
அதேபோல், தை மாதத்தில் ஐயப்ப வழிபாடு நிறைவுறுதல் என்பதும் மிக முக்கியமான வைபவமாகச் சொல்கிறார்கள் ஐயப்ப பக்தர்கள். கார்த்திகை மாதப் பிறப்பில் தொடங்குகிற ஐயப்ப மலைக்கு விரதம் மேற்கொள்வதும் ஐயப்ப சுவாமியை தரிசிப்பதும், தை மாதத்தில், தை மாதப் பிறப்பில், மகர ஜோதி தரிசனத்துடன் நிறைவுறுகிறது.

இதேபோல், தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசையும் மிக உன்னதமான, முன்னோர் வழிபாட்டுக்கான நாள். தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை என மூன்று அமாவாசைகள், பித்ரு வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது.

இந்த வரிசையில், தை மாதத்தில் இன்னொரு விஷயமும் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. அது... கண்ணேறு கழித்தல் என்கிற திருஷ்டி சுற்றிப் போடுதல். அக்கம்பக்கத்தாரின் பார்வை, விழாக்களிலும் விசேஷங்களிலும் யாராவது ‘திருஷ்டி சுற்றிப் போடுங்க, என் கண்ணே பட்ரும்போல இருக்கு’ என்றெல்லாம் சொல்லுவார்கள். சொல்லுவோம்.

தை மாதத்தில், வெள்ளிக்கிழமைகளில் மறக்காமல் வீட்டாருக்கு திருஷ்டி சுற்றிப் போடவேண்டும் என வலியுறூத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வெள்ளிக்கிழமையில், மாலையில் விளக்கேற்றியதும், சூரியன் அஸ்தமித்த பிறகு, குடும்பத்தார் அனைவரையும் நடுஹாலில் அமரவைத்து திருஷ்டி சுற்றிப் போடவேண்டும். கிழக்குப்பார்த்து அல்லது வீட்டின் வாசலைப் பார்த்து உட்காரச் செய்யவேண்டும்.

பூசணிக்காய் கொண்டும் எலுமிச்சை கொண்டும் தேங்காய் கொண்டும் சுற்றிப் போடுவது மிக மிக விசேஷமானது. வலிமை மிக்கது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
பூசணிக்காயின் ஒரு பகுதியில் லேசாக ஒரு சதுர வடிவில் வெட்டி, அதில் குங்குமம் இடவேண்டும். அதில் சில்லறைக் காசுகள் போடவேண்டும் அந்தக் காசுகளை குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவடும் போடவேண்டும். பிறகு பூசணியின் அந்தப் பகுதியை மூடிவிடவேண்டும். அதன் மேல் சூடமேற்றி, குடும்பத்தாரை வரிசையாக அமரவைத்து சுற்றிப் போடவேண்டும். பின்னர் நிலைவாசல் பகுதியில், வீட்டுக்கும் திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

இதேபோல், தேங்காயின் மீது சூடமேற்றி திருஷ்டி கழிக்கவேண்டும். எலுமிச்சையில் சூடம் வைத்து தீபமேற்றி திருஷ்டி கழிக்கவேண்டும். பின்னர், பூசணிக்காய், தேங்காய் ஆகியவற்றை தெருமுச்சந்திப் பகுதியில், சிதறுகாயாக உடைக்க வேண்டும். அதேபோல், திருஷ்டி சுற்றப்பட்ட எலுமிச்சையை, நான்காகப் பிரித்து நான்கு திசைகளிலும் வீசி திருஷ்டி கழிக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தை வெள்ளிக்கிழமைதோறும் தொடர்ந்து திருஷ்டி போடுவது வீட்டின் திருஷ்டியையும் இல்லத்தில் இருப்பவர்களின் திருஷ்டியையும் போக்கிவிடும். இதுவரை இருந்த தடைகளையெல்லாம் நீங்கிவிடும். இதுவரை தடைப்பட்டுக்கொண்டே இருந்த திருமணம் முதலான சுபகாரியங்கள், கோலாகலமாக இல்லத்தில் நடைபெறும். கடன் தொல்லையில் இருந்து மீளச் செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x