Last Updated : 13 Jan, 2021 02:59 PM

 

Published : 13 Jan 2021 02:59 PM
Last Updated : 13 Jan 2021 02:59 PM

தைத் திருநாளில்... வம்சத்தை வாழச் செய்யும் குலதெய்வ வழிபாடு! 


தைத் திருநாள் வேளையில், குலதெய்வ வழிபாட்டைச் செய்ய மறக்காதீர்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். குலதெய்வ வழிபாடும் நமக்கு நல்ல நல்ல வழிகளையெல்லாம் கொடுக்கும்.

பொங்கல் திருநாள் பண்டிகை என்பது நம் வாழ்வில் இரண்டறக் கலந்த மிக முக்கியமான வைபவம். பக்திக்கு உரிய பண்டிகையாகவும், நன்றியைச் சொல்லும் திருநாளாகவும், கலாச்சாரத்தை உணர்த்துகிற வைபவமாகவும் உறவுகளின் ஒற்றுமையை உணர்ந்து செயல்படுகிற நன்னாளாகவும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

தை மாதத்தின் பிறப்பு பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்பட்டாலும் மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகிப் பண்டிகையில் இருந்தே பொங்கல் விழா என்பது தொடங்கிவிடுகிறது.

போகிப் பண்டிகை என்பது பழைய, தேவையில்லாத பொருட்களை வீட்டில் இருந்து அகற்றுகிற, வீட்டை சுத்தப்படுத்துகிற நன்னாள். நம் மனதில் உள்ள துர்சிந்தனைகளையும் எதிர்மறை சிந்தனைகளையும் கெட்ட குணங்களையும் அகற்றுகிற நாளாகவும் போகிப் பண்டிகையைச் சொல்வார்கள்.

போகி, தைப்பொங்கல் இந்த இரண்டு நாட்களிலும் மிக முக்கியமாக நாம் செய்ய வேண்டியது... குலதெய்வ வழிபாடு. பொதுவாகவே, நாம் ஒவ்வொருவருவரும் நம்முடைய குலதெய்வ வழிபாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். குலதெய்வக் கோயிலுக்குச் செல்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் மிக மிக அவசியம்.
நம் குடும்பத்தில் முக்கியமான விசேஷங்கள், பூஜைகள் நடப்பதற்கு முன்னதாக, குலதெய்வ வழிபாட்டைச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வருடத்துக்கு ஒருமுறையாவது, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். அப்படியொரு வழிபாடாகத்தான், போகி, பொங்கல் முதலான பண்டிகையுடன் குலதெய்வ பிரார்த்தனையையும் சேர்த்துக் கொண்டு கிராமங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

போகியன்று மாலையில் வீட்டிலேயே குலதெய்வ வழிபாடு செய்வார்கள். அதேபோல், பொங்கல் நன்னாளிலும் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலர், குலதெய்வக் கோயிலுக்குச் சென்று, பொங்கல் படையலிடுவதும் வழக்கத்தில் உள்ளது.

அவரவர் குடும்பத்து வழக்கப்படி, அவர்களின் குலதெய்வத்தை பொங்கல் திருநாளில் மேற்கொள்ளவேண்டும். வீட்டில் குலதெய்வப் படங்கள் இருந்தால், அந்த சுவாமிப் படத்துக்கு பூக்களிட்டு, சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்து, பூக்களிட வேண்டும்.

குலதெய்வப் படங்களுக்கு நம்மால் முடிந்தவற்றைக் கொண்டு படையலிட வேண்டும். ‘இந்த தைப்பிறப்பு எங்கள் குடும்பத்துக்கு வளமும் நலமும் தர நீதான் அருள்புரியணும்’ என்று குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்துகொள்வார்கள் பக்தர்கள்.

‘வீட்டில் குலதெய்வப் படமெல்லாம் இல்லை’ என்பவர்களும் உண்டு. வீட்டில் விளக்கேற்றி, குலசாமியின் பெயர்களை மூன்று முறை சொல்லி, பூஜையறையில் படையல் வைத்தால், அவற்றை குலதெய்வம் பெற்றுக்கொள்ளும். நம் வீட்டுக்குள் குலதெய்வத்தின் அருள் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தைப் பொங்கல் நன்னாளில், இயற்கையை வணங்கித் தொழுகிற அதேவேளையில், குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்வோம். குலதெய்வத்தின் அருளின்றி எதுவும் நிகழாது. நம் வம்சத்தைக் காக்கிற, வம்சத்தை வாழையடிவாழையாக வளரச் செய்கிற குலதெய்வ வழிபாட்டை, தைத்திருநாளில் மறக்காமல் மேற்கொள்வோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x