தை மாத பிறப்பில் தர்ப்பணம், முன்னோர் வழிபாடு! 

தை மாத பிறப்பில் தர்ப்பணம், முன்னோர் வழிபாடு! 
Updated on
1 min read

தை மாதப் பிறப்பில், தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். உத்தராயன புண்ணியக் காலத்தின் தொடக்கமான தை மாதப் பிறப்பில் நாம் செய்யும் முன்னோர் வழிபாடு, நம் வாழ்வில் உள்ள தடைகளையெல்லாம் நீக்கும்.

எந்த வழிபாடு செய்தாலும் முன்னோர் வழிபாடு என்பதை தவறாமல் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களை வழிபட்டால்தான் நம் குடும்பமும் நம்முடைய சந்ததியும் சிறந்து விளங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அப்படி முன்னோர் ஆராதனையைச் செய்யாமல் விட்டால், அதனால் ஏற்படும் பித்ரு முதலான சாபங்களும் தோஷங்களும் நம் சந்ததியினர் மேல் வந்துவிழும். வேறு வழிபாடுகள் செய்தோமா செய்யவில்லையா என்பதையெல்லாம் ஒருவரின் ஜாதகம் தெரிவிப்பதும் தெரிவிக்காததும் இருக்கட்டும்... மிக முக்கியமாக பித்ரு ஸ்தானத்தை ஜாதகமே விவரிக்கும் என்கிறார்கள். இதனால் நம் ஜாதகத்தின் பலம் குறையும் என்று தெரிவிக்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

நாம் இருக்கும் வரை நமக்கு இருக்கிற மிக முக்கியக் கடமையாக, கடனாக பித்ரு வழிபாட்டைச் சொல்லி அறிவுறுத்துகிறது தர்மசாஸ்திரம். ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை, ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, புரட்டாசி மகாளயபட்ச காலத்தின் பதினைந்து நாட்கள், கிரகண காலங்கள் முதலான 96 தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும், முன்னோர்களின் பெயர்களையும் நம்முடைய கோத்திரத்தையும் சொல்லி மூன்று மூன்று முறை எள்ளும் தண்ணீர் விடவேண்டும். எள்ளின் அளவு குறைவாகவும் தண்ணீர் அதிகமாகவும் விட்டு, தர்ப்பணம் செய்யவேண்டும்.

நாளை ஜனவரி 14ம் தேதி தை மாதம் பிறக்கிறது. மாதப் பிறப்பு நாளில் தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்குவோம். வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, படையலிட்டு வணங்கி வழிபடுவோம்.

தை மாதம் உத்தராயன புண்ணிய காலம் தொடங்குகிறது. நாளை தை பிறப்பில் இருந்து உத்தராயன காலம் தொடங்குகிறது. இந்தப் புண்ணிய காலத்தில், முன்னோர்களை வழிபடுவோம். தர்ப்பணம் முதலான சடங்குகளைச் செய்து பிரார்த்திப்போம். இரண்டு பேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குவோம்.

முன்னோர் அருளையும் ஆசியையும் பெறுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in