இஸ்லாம் வாழ்வியல்: கேட்பதற்குத் தயாரா?

இஸ்லாம் வாழ்வியல்: கேட்பதற்குத் தயாரா?
Updated on
1 min read

எது வேண்டுமானாலும் கேளுங்கள், நான் தருகிறேன் என்று கூறுபவர்கள் யாராவது உண்டா? ஆம் உண்டு! எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம். இரவிலோ பகலிலோ, தனியாகவோ கூட்டாகவோ கேளுங்கள்! கொடுப்பதற்கு நான் தயாராக உள்ளேன் என்று இறைவன் கூறுகிறான். ஒரு நபி மொழி இப்படிக் கூறுகிறது: நிச்சயமாக இறைவன் மிக அதிக வெட்கமுடையவனாக இருக்கிறான். கேட்காமலேயே அதிகம் தருபவன். மனிதன் இறைவனுக்கு முன்னால் கேட்பதற்குக் கையேந்தினால் அவன் கைகளை வெறுமையாகத் திருப்பி அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான். நமது பிரச்சினைகளை யாராவது காது கொடுத்து கேட்க மாட்டார்களா என்று மனது ஏங்கும். “அடியார்கள் நான் எங்கே என்று கேட்டால் அவர்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறேன். என்னை எப்போது அழைத்தாலும் உங்கள் அழைப்புக்குச் செவிமடுக்கும் வகையில் உங்களின் பிடரி நரம்பை விட மிக அருகிலேயே உள்ளேன்” என எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு நண்பனைப் போலத் தோள் கொடுக்கக் காத்திருக்கிறான். பிரார்த்தனை, வணக்கத்தின் சாரமாகும் என நபிகள் நாயகம் கூறுகிறார். “ஒரு மனிதர், இறைவனிடம், ‘என் சகோதரரின் பாவங்களை மன்னிப்பாயாக’ என்று கேட்டால் அவருக்கு பக்கத்திலேயே ஒரு வானவர் அமர்ந்திருப்பார். பிறருக்காகக் கையேந்துகிற இவரின் கைகளை நிரப்பி இவரின் பாவங்களை மன்னிப்பாயாக என்று பிரார்த்திக்கிறார்.” என்கிறார் நபிகள். கொடுப்பதற்கு நிபந்தனையும் உண்டு பிரார்த்திப்பவரின் உணவு அடுத்தவர் வயிற்றில் அடித்ததாக இருக்க கூடாது. உடை, அடுத்தவரிடமிருந்து பறிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. கொடுப்பதற்கு வல்ல இறைவன் தயாராக இருக்கிறான். நாம்தான் தயாராக வேண்டும் கேட்பதற்கு. இறைவா எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் சிறந்த வாழ்க்கையையும் நற்பேறுகளையும் வழங்குவாயாக!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in