Last Updated : 12 Jan, 2021 08:05 PM

 

Published : 12 Jan 2021 08:05 PM
Last Updated : 12 Jan 2021 08:05 PM

பொங்கல் ஸ்பெஷல் ; தை பிறக்கட்டும்... வழி கிடைக்கட்டும் 

தை பிறக்கட்டும்... வழி கிடைக்கட்டும். தைத்திருநாளில், ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்வோம். பொங்கலிடுவோம். இயற்கையை வணங்கிக் கொண்டாடுவோம்.

மார்கழி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்பார்கள். தை மாதமும் அப்படித்தான். பண்டிகைகளுக்கும் விழாக்களுக்கும் விசேஷங்களுக்கும் உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. உழவுக்கு வந்தனம் சொல்லும் மாதம். உழவர்களைப் போற்றும் மாதம். உழவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, கால்நடைகளை ஆராதிக்கும் மாதம்.
தை மாதத்தின் பிறப்பே பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி என்று போற்றப்படுகிறது. இயற்கையை வழிபடுவதற்கு உரிய நாள். சூரிய பகவானை வணங்கி நன்றி சொல்லி பிரார்த்தனை செய்வதற்கான நாள்.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை. வீட்டில் உள்ள பழைய பொருட்களையும் துணிகளையும் குப்பைகளையும் அகற்றி எரிக்கும் உன்னதநாள். இல்லத்தை தூய்மையாக்கும் நன்னாள். போகிப் பண்டிகைக்கு மறுநாள் தை மாதப் பிறப்பு. பொங்கல் திருநாள். உழவுத் தொழிலின் மேன்மையை உணர்த்துகிற அற்புதமான பண்டிகை.
தை மாதம் தொடங்கும் வேளையில், அறுவடை முடிந்திருக்கும். விளைந்த பொருட்களைக் கொண்டு, எல்லா உயிர்களும் வாழ அருள்புரியும் பிரத்தியட்ச தெய்வமான சூரியனை வழிபடுவதே பொங்கலின் தாத்பரியம்!

இந்தநாளில், காலையில் எழுந்ததும் நீராடி, பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண்டும். புதிதான பொங்கல் பானையைக் கிழக்குப் பார்த்து வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி , கிழங்கு ஆகியவற்றை பானையில் கட்டிவைக்கவேண்டும். பொங்கல் பானையில் அரிசி மாவில் நீர்விட்டு, சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பது வழக்கம்.

பொங்கல் பொங்கி வழியும் போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரல் எழுப்புவோம். நைவேத்தியப் பொருட்களை வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும். முன்னதாக, விநாயகப் பெருமானை வணங்கிவிட்டு, சூரிய பூஜை செய்யவேண்டும். பூஜை செய்யும் இடத்தில், திறந்த வெளியில், அரிசி மாவால் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து பூஜை செய்கிற வழக்கமும் உண்டு.

தலைவாழை இலையில், சமைத்தவற்றை பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடும் சம்பிரதாயமும் இருக்கிறது. அப்போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரல் எழுப்பி வணங்கவேண்டும்.

முக்கியமான விஷயம்... பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானை அல்லது பாத்திரத்தை காலி செய்யக் கூடாது என்பது ஐதீகம்! ஒரு துளி பருக்கையேனும் அன்றைய நாளில், இருக்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தை பிறக்கட்டும்... வழி கிடைக்கட்டும். தைத்திருநாளில், ஆத்மார்த்தமாக பூஜைகள் செய்வோம். பொங்கலிடுவோம். இயற்கையை வணங்கிக் கொண்டாடுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x