Last Updated : 12 Jan, 2021 01:54 PM

 

Published : 12 Jan 2021 01:54 PM
Last Updated : 12 Jan 2021 01:54 PM

மார்கழி கடைசி செவ்வாய்; துர்கைக்கு எலுமிச்சை தீபம்! 


மார்கழி கடைசி செவ்வாய்க்கிழமையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுவோம். ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபடுவோம். வளமும் நலமும் தந்தருளுவாள் தேவி.

மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது பூஜைகளுக்கும் வழிபாடுகளுக்கும் உரிய அற்புதமான மாதம். இந்த மாதத்தில் பெருமாள் வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். அதேபோல் சிவ வழிபாடு செய்வதும் மகத்துவம் வாய்ந்தது.

சிவ வைணவ வழிபாடுகள் போலவே, மார்கழி மாதத்தில் லக்ஷ்மி வழிபாடு செய்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். இந்த நாட்களில், வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடுவது சக்தியின் பேரருளைப் பெறலாம் என்பது ஐதீகம்.

அம்பாளை சக்தி என்று போற்றுகிறோம். சிவமில்லையேல் சக்தியில்லை என்கிறோம். சிவபெருமானுக்கே சக்தியை வழங்குபவள் என்பதால்தான் அம்பிகையை பராசக்தி என்று போற்றி வணங்குகிறோம்.

உலகாளும் பராசக்தியின் அம்சமாக, பராசக்தியில் இருந்து வெளிப்பட்டவளாக அருள் மழை பொழிகிறாள் துர்காதேவி. துர்கை என்றால் துக்கத்தையெல்லாம் போக்கி அருளுபவள் என்று அர்த்தம்.

அனைத்து சிவாலயங்களிலும் கோஷ்டத்தில் துர்கையின் சந்நிதி அமைந்திருக்கும். அம்பாள் குடிகொண்டிருக்கும் கோயிலிலும் துர்கைக்கு சந்நிதி இருக்கும். சிவ சந்நிதியின் கோஷ்டப்பகுதியில் குடிகொண்டிருக்கும் துர்கையை சிவ துர்கை என்றே கொண்டாடி வழிபடுகிறோம்.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் ராகுகாலவேளையில் துர்கைக்கு தீபமேற்றி வழிபடுவது தீயசக்திகளின் தாக்கத்தை துரத்தியடிக்கும் என்றும் எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும் என்றும் விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை 3 முதல் 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை ராகுகாலம். இந்த நேரத்தில், ஆலயத்துக்குச் செல்வதும் துர்காதேவிக்கு தீபமேற்றுவதும் எண்ணற்ற நன்மைகளை வாரி வழங்கும்.

குறிப்பாக, ராகுகால வேளையில், துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வணங்கி வழிபடுவார்கள் பெண்கள். இதனால், மாங்கல்ய தோஷம் விலகும். மாங்கல்ய பலம் பெருகும். தடைப்பட்ட திருமண யோகமெல்லாம் கைகூடிவரும் என்கிறார்கள் பெண்கள்.

மார்கழி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை நாளில், மறக்காமல் துர்கையை ஆராதிப்போம். எலுமிச்சை தீபமேற்றி வணங்குவோம். நம்மையும் நம் இல்லத்தையும் தழைத்தோங்கச் செய்வாள் துர்காதேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x